செங்கல்பட்டு:
பழனிசாமி தலைமையில்தான் ஆட்சி அமையும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் மேலும் கூறியிருப்பதாவது: தமிழக அரசியலில் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே திமுக கூட்டணியை தோற்கடிக்க முடியும் என்பதற்காகதான் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுக – பாஜக கூட்டணியால் யாருக்கும் எந்த நெருக்கடியும் இல்லை. தமிழகத்தில் பழனிசாமி தலைமையில்தான் ஆட்சி அமையும் என அமித் ஷா தெளிவாக கூறியிருந்தார். கூட்டணி அரசு அமைப்போம் என அவர் எந்த இடத்திலும் சொல்லவில்லை.
ஆனால், அமித் ஷா பேசிய சில கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாக தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. கூட்டணி விவகாரத்தில் எங்களுக்குள் எந்த முரண்பாடும் கிடையாது. தேர்தலுக்கு இன்னும் காலஅவகாசம் இருப்பதால், தொகுதிப் பங்கீடு குறித்து பின்னர் பேசி முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே செங்கல்பட்டு அருகே பாஜக விழுப்புரம் பெருங்கோட்டம் சார்பில், நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நயினார் நாகேந்திரனை பரனூர் அருகே வரவேற்பு அளித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
இந்நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: பாஜகவின் கொடி பறக்கிறது என்றால், அதில் ஒவ்வொருவரின் உழைப்பும் இருக்கிறது. வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணியுடன் ஆட்சி அமையும். தமிழகத்தில் தற்போது நடைபெறுகிற ஆட்சி, ஆன்மிகத்துக்கு எதிரான ஆட்சி. அதனை அகற்ற வேண்டும்.
எனவே, திமுகவை வீழ்த்துவதே நமது ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பூத் கமிட்டியை பாஜக நிர்வாகிகள் சரி செய்தால் மட்டுமே சட்டப்பேரவை தேர்தலில் நாம் வெற்றி பெற முடியும்.
தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் அதிமுக, பாஜக கூட்டணி அமைய வேண்டும் என நினைத்தேன். அது தற்போது நிறைவேறியுள்ளது. கூட்டணி குறித்து சமூக வலைதளங்களில் யாரும் பேசவேண்டாம். அதுகுறித்து மேலிடத்தில் உள்ளவர்கள் முடிவெடுப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.