பெங்களூரு:
ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த பெங்களூருவை சேர்ந்த பாரத் பூஷனின் உடலுக்கு கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் அருகே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மஞ்சுநாத் ராவ், பாரத் பூஷன், மஞ்சுநாத் சோம் ஷெட்டி ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
அவர்களின் உடல்கள் நேற்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் பெங்களூரு கொண்டு வரப்பட்டன.
பெங்களூருவில் உள்ள மத்திகெரேவில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பாரத் பூஷனின் உடலுக்கு கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் ராமலிங்க ரெட்டி, ஜார்ஜ் அஞ்சலி செலுத்தினர்.
உயிரிழந்த மஞ்சுநாத் ராவ், மஞ்சுநாத் சோம் ஷெட்டியின் குடும்பத்தினருக்கு முதல்வர் சித்தராமையா தொலைபேசி மூலம் ஆறுதல் கூறினார்.
178 பேர் பெங்களூரு வருகை: ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்த கர்நாடகாவை சேர்ந்த பயணிகளை பத்திரமாக அழைத்து வரும் பணியை மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இதன்படி தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் காஷ்மீர் சென்று சுற்றுலா முகவர்களின் மூலம் கர்நாடக பயணிகள் குறித்த தகவலை திரட்டி வருகிறார்.
இந்த சூழலில் நேற்று சிறப்பு விமானம் மூலம் 178 சுற்றுலா பயணிகள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
எஞ்சியுள்ள சுற்றுலா பயணிகளை ஓரிரு தினங்களில் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சந்தோஷ் லாட் தெரிவித்தார்.