மறைமலை நகரில் ஃபோர்டு நிறுவனம் என்ஜின் உற்பத்தி ஆலை: ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து!!

சென்னை,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தின்போது ஃபோர்டு நிறுவனம் உறுதியளித்தபடி ரூ.3250 கோடி முதலீட்டில் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மறைமலை நகரில் அடுத்த தலைமுறை வாகன இன்ஜின் உற்பத்தி மேற்கொள்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது.

முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024–-25–ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர், ஃபோர்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து, தமிழ்நாட்டில் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது ஃபோர்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உறுதியளித்தபடி, அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றைய தினம், முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், வர்த்தகத் துறை செயலாளர் வி. அருண் ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தாரேஸ் அகமது, ஃபோர்டு நிறுனத்தின் உலகளாவிய இயக்குநர் மார்ட்டின் எவரிட், துணைத் தலைவர் மாத்யூ கோடிலூஸ்கி, தாய்லாந்து திட்டத்தின் மேலாண்மை இயக்குநர் சைமோநேட்டா வெர்டி, இயக்குநர் (உற்பத்தி) தீரஜ் தீக்சித், இயக்குநர் ஸ்ரீபாத் பட் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *