சென்னை:
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை 55 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு, பஞ்சாப், மும்பை, குஜராத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடி வருகிறார்.
இந்நிலையில், முகமது சமியிடம் ரூ. 1 கோடி கேட்டு கொலை மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, முகமது சமிக்கு ஒரு மின்னஞ்சல் வந்ததாகவும், அதில் ரூ. 1 கோடி கொடுக்காவிட்டால் உங்களை கொன்றுவிடுவதாகவும் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக முகமது சமி உடனடியாக தனது சகோதரர் முகமது ஹசீப் அம்ரோஹா மூலம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.