சென்னை:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நள்ளிரவு 1.05 முதல் 1.30 மணி வரை சுமார் 25 நிமிடத்திற்குள் இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து 24 தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளை ஒழிக்க மத்திய அரசுடன் ஒன்றிணைந்து நிற்போம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ஆந்திர மாநில துணை முதல்வரான பவன் கல்யாண், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை வீழ்த்துவதில் இஸ்ரேலை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பவன் கல்யாண் கூறியதாவது:-
நமது ஆயுதப்படைகள் பாராட்டத்தக்க செயலை செய்துள்ளது. இது நீடித்த போருக்கான நேரம். இஸ்ரேலை போல இந்தியா தீர்க்கமான தாக்குதல் நடத்தி, பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் பெருமைக்குரிய தருணம்.
காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தொடர்ந்து இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்திற்குரியது.
இவ்வாறு பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.