காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.
இந்திய தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.
இந்திய ராணுவ அதிகாரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
ஆனால் சில மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியில் இறங்கி, மீண்டும் டிரோன்களை ஏவி வாலாட்டியது. அதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. அதன் பின் எல்லையில் வெடிகுண்டு சத்தங்கள் ஓய்ந்தன.
4 நாட்கள் நடந்த தாக்குதல் ஓய்ந்ததால் காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பியது. மின்வினியோகமும் வழங்கப்பட்டது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்தும் வழக்கம்போல் நடைபெற்றது.
தாக்குதல் நிறுத்தத்தின் அடுத்தக்கட்டமாக, இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் இடையேயான 2-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலைக்கு ஒத்திவைப்பு என தகவல் வெளியாகி உள்ளது.
3-வது கட்ட பேச்சுவார்த்தை அடுத்த 3 நாட்களில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.