பழநி:
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ரூ.8.48 கோடியில் மூத்த குடிமக்களுக்கான உண்டு உறைவிடம் கட்டும் பணிகளை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 27) தொடங்கி வைத்தார்.
ஆதரவற்றோர் , குடும்பத்தினரால் கைவிடப்பட்ட மூத்த குடிமக்களை பாதுகாக்கும் பொருட்டு பழநி, திருநெல்வேலி, சென்னை ஆகிய மூன்று இடங்களில் மூத்த குடிமக்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய உண்டு உறைவிடங்கள் தொடங்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.
அதன்படி, அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு உட்பட்ட அன்பு இல்ல வளாகத்தில் ரூ.8.48 கோடியில் மூத்தகுடிமக்களுக்கு உண்டு உறைவிடம் கட்டும் பணிகளை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் இன்று (மே 27) செவ்வாய்கிழமை காலை தொடங்கி வைத்தார்.
உண்டு உறைவிடத்தில் ஒரு அறையில் 4 பேர் தங்கும் வகையில் மொத்தம் 25 அறைகள், வரவேற்பு அறை, பார்வையாளர்கள் அறை, சமையல் கூடம், உணவருந்தும் அறை, பொருட்கள் வைப்பறை, நூலகம், மருந்தகம், கூட்ட அரங்கு, நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக நடைபாதையுடன் கூடிய பூங்கா என மொத்தம் 38,750 சதுர அடியில் உண்டு உறைவிடம் அமைக்கப்பட உள்ளது.
பழநி அன்பு இல்ல வளாகத்தில் நடந்த விழாவில் எம்எல்ஏ செந்தில்குமார், எம்பி சச்சிதானந்தம், நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, துணை தலைவர் கந்தசாமி, கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.