ராமேசுவரம் நம்புநாயகி அம்மன் கோயிலில் சவுமியா அன்புமணி தனது இரு மகள்களுடன் நேர்த்திக்கடன் !!

ராமேசுவரம்:
பாமக கட்சியின் பரபரப்பான கோஷ்டி மோதலுக்கு இடையே ராமேசுவரம் நம்புநாயகி அம்மன் கோயிலில் சவுமியா அன்புமணி தனது இரு மகள்களுடன் நேர்த்திக்கடன் செலுத்தினார்.

பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கட்சிப் பொருளாளர் திலகபாமா, சமூக நீதி பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு மற்றும் 60 மாவட்டத் தலைவர்கள், செயலாளர்களை ராமதாஸ் நீக்கியுள்ளார்.

அன்புமணியுடன் சென்ற மாநிலப் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனை கட்சிப் பதவியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக நீக்கிவிட்டு, அப்பதவிக்கு முரளி சங்கர் என்பவரை ராமதாஸ் நியமித்துள்ளார்.

இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா அன்புமணி மற்றும் அவரது இரு மகள்கள் சங்கமித்ரா அன்புமணி, சஞ்சுமித்ரா அன்புமணி ஆகிய மூவரும் ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் அமைந்துள்ள நம்புநாயகி அம்மன் கோயிலுக்கு நேத்திக்கடன் செலுத்துவதற்காக திங்கட்கிழமை வந்திருந்தார்.

அன்புமணி ராமதாஸின் மகள்கான சங்கமித்ரா அன்புமணி, சஞ்சுமித்ரா அன்புமணி ஆகிய இருவரும் நம்புநாயகி அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் அம்மியில் விரலி மஞ்சள் வைத்து அரைத்து சாமிக்கு எடுத்துச் சென்றனர்.

பின்னர் மூவரும் அரைத்து வைத்திருந்த மஞ்சளுடன், பாமக கட்சியின் சின்னமான மாம்பழங்களுடன் மலர்களையும் நம்புநாயகி அம்மனுக்கு படைத்து மனமுருகி பிரார்த்தனை செய்தார். மேலும், அம்மனுக்கு சாத்திய பட்டு சேலை உள்ளிட்ட பிரசாதங்களை பெற்றுக் கொண்டனர்.

பாமகவில் தந்தை – மகன் இடையே ஏற்பட்டுள்ள உச்சகட்ட கோஷ்டி மோதலால் தொடர்ந்து பாமகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா தனது மகள்களுடன் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *