வழிப்பறி செய்து இளைஞரை தள்ளிவிட்டு கொலை செய்தவருக்கு சிறை தண்டனை: காவல் ஆய்வாளர் கருணாகரனை நேரில் அழைத்து பாராட்டிய காவல் ஆணையர் அருண்!!

சென்னை:
பணத்தை பறித்ததோடு, அரசுப் பேருந்தில் தள்ளிவிட்டு இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வழிப்பறி கொள்ளையனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுக் கொடுத்த காவல் ஆய்வாளரை, காவல் ஆணையர் அருண் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.

எழும்பூர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஓட்டல் கேட்டின் முன்பு கடந்த 2018 அக்டோபர் 14-ம் தேதி சாலையில் 25 வயது இளைஞர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது, அவரை வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் வழிமறித்து தாக்கி அவரின் பாக்கெட்டிலிருந்த பணத்தை பறித்துவிட்டு அடித்து தள்ளினர். அப்போது அந்த வழியாக வந்த மாநகரப் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பந்தப்பட்ட இளைஞர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக எழும்பூர் காவல் ஆய்வாளராக இருந்த கருணாகரன் தலைமையிலான போலீஸார், ஆதாய கொலை உள்ளிட்ட மேலும் சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

முதல் கட்டமாக இந்த வழக்கு தொடர்பாக கமல் என்ற மதுரை முத்து (28) என்பவர் கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை அல்லிக்குளம் வளாகத்தில் உள்ள 21-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

10 ஆண்டு கடுங்காவல்: இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு கடந்த 16-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது.

இதில் குற்றச்சாட்டுக்கு உள்ளான மதுரை முத்துவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மற்றொருவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், வழிப்பறி கொள்ளையனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுக் கொடுத்த காவல் ஆய்வாளர் கருணாகரனை காவல் ஆணையர் அருண் நேற்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *