தண்ணீர் லாரி மோதி பள்ளி சிறுமி உயிரிழந்ததன் எதிரொலியாக சென்னைக்குள் வரும் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கி காவல் ஆணையர் அருண் உத்தரவு!!

சென்னை:
தண்ணீர் லாரி மோதி பள்ளி சிறுமி உயிரிழந்ததன் எதிரொலியாக சென்னைக்குள் வரும் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கி காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கொளத்தூர், பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி சவுமியா, நேற்று முன்தினம் காலை தாயாருடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விவகாரத்தில் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நிலையில், நேரக் கட்டுப்பாடுகளை மீறி மக்கள் அதிகளவில் சாலையை பயன்படுத்தும் பீக் ஹவர்ஸில் தண்ணீர் லாரியை அனுமதித்த குற்றச்சாட்டில் செம்பியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுடலை மணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். புளியந்தோப்பு போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் போக்குவரத்து போலீஸாருக்கு பிறப்பித்த உத்தரவு:

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வரும் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கக்கூடாது. பள்ளி தொடங்கும், முடியும் நேரங்களில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீஸார் கட்டாயம் ஈடுபட வேண்டும். கவனக் குறைவாக செயல்பட்டு விபத்து உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்குள் ஒப்படைக்கக்கூடாது.

காலை 7 மணிமுதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணிமுதல் இரவு 8 மணி வரையும் பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களை அனுமதிக்கும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *