சென்னை:
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த டெஸ்டில் 2 இன்னிங்ஸ்களிலும் ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தினார். சில வருடங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்துக்கு பின்பு மீண்டு வந்துள்ள பண்டின் ஆட்டம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
டிசம்பர் 30, 2022 அன்று டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான ரூர்க்கிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, பண்ட் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார். கார் ஒரு தடுப்புச் சுவரில் மோதி தீப்பிடித்தது, இதனால் ரிஷப் பண்ட் பலத்த காயமடைந்தார்.
கார் விபத்தில் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் ரிஷப் பண்ட் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது பண்டிற்கு மருத்துவர் தின்ஷா பர்திவாலா அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தினார்.
இந்நிலையில், பண்ட் குறித்து பேசிய மருத்துவர் தின்ஷா பர்திவாலா, “கொடூரமான சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனை வந்ததும் ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வியே என்னால் மீண்டும் விளையாட முடியுமா? என்பதுதான்” என்று தெரிவித்தார்.