நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் கடந்த 8-ந்தேதி தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து ஹேசில்வுட்டின் (5 விக்கெட்) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 162 ரன்னில் சுருண்டது.
நியூசிலாந்தும் முதல் இன்னிங்சில் பதிலடி கொடுத்தது. மாட் ஹென்றி ஏழு விக்கெட் சாய்க்க ஆஸ்திரேலியா 256 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
முதல் இன்னிங்சில் 94 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடியது. டாம் லாதம் (73), கேன் வில்லியம்சன் (51), ரச்சின் ரவீந்திரா (82), டேரில் மிட்செல் (58), ஸ்காட் குகெலின் (44) ஆகியோரின் ஆட்டத்தால் 372 ரன்கள் குவித்தது.
முதல் இன்னிங்சில் 94 ரன்கள் பின்னதங்கியதால் ஆஸ்திரேலியா அணிக்கு 279 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் ஸ்மித் (9), லபுசேன் (6), கவாஜா (11), கேமரூன் க்ரீன் (5) அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 34 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
5-வது விக்கெட்டுக்கு டிராவிட் ஹெட் உடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்த ஜோடி மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. டிராவிட் ஹெட் 17 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டிராவிஸ் ஹெட் மேலும் ஒரு ரன் சேர்த்த 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் அலேக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நங்கூரம் பாய்ச்சி நின்றது. நியூசிலாந்து பந்து வீச்சாளர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. இருவரும் அரைசதம் கடந்து விளையாடினர். இதனால் ஆஸ்திரேலியா வெற்றி நோக்கி பயணம் செய்தது.
அணியின் ஸ்கோர் 220 ரன்னதாக இருக்கும்போது மிட்செல் மார்ஷ் 80 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா வெற்றிக்கு 59 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த ஸ்டார்க் ரன்ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார்.
8-வது விக்கெட்டுக்கு மிட்செல் மார்ஷ் உடன் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அவர் 44 பந்தில் 32 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா 65 ஓவரில் 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 281 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அலேக்ஸ் கேரி 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா தொடரை 2-0 என வென்றது.