சென்னை
திரு.வி.க.நகரில், ரூ.11.77 கோடி மதிப்பீட்டில் இரண்டு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையக் கட்டடம், மற்றும் சென்னை உயர்நிலைப் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு இன்று ரூ.11.77 கோடி மதிப்பீட்டில் திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு 73 மற்றும் வார்டு 75-ல் இரண்டு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையக் கட்டடம், மற்றும் சென்னை உயர்நிலைப் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் மற்றும் மாநகராட்சி மூலதன நிதி ஆகியவற்றின் கீழ் திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-73, குக்ஸ் சாலை வாடியா நகர் பகுதியில் ரூ.3.05 கோடி மதிப்பீட்டிலும், வார்டு-75, நம்மாழ்வார் பேட்டை 2-வது தெரு பகுதியில் ரூ.2.28 கோடி மதிப்பீட்டிலும் என இரண்டு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையக் கட்டடத்திற்கான பணிகளை அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்த நகர்ப்புற சுகாதர மையங்களில் அவசர அறை, மருத்துவ அலுவலர் அறை, மருந்தகம், ஊசிபோடும் அறை, ஆய்வக அறை, ஆவண அறை, மருந்து இருப்பு அறை, மருந்துவ ஆலோசனை அறை, பதிவு அறை, பணியாளர்களின் அறை, ஆண்கள் பெண்கள் கழிவறை, காத்திருப்பு கூடம் உள்ளிட்ட வசதிகள் அமையவுள்ளன.
இதனை தொடர்ந்து, வார்டு 73, புளியந்தோப்பு அம்மையம்மாள் தெரு பகுதியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.6.44 கோடி மதிப்பீட்டில் சென்னை உயர்நிலைப் பள்ளிக்கான கட்டுமானப் பணிகளை அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இப்பள்ளிக் கட்டடம் 17,569 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளத்துடன் கட்டபட்டவுள்ளது. இதில் 19 வகுப்பறைகள், தலைமையாசிரியர் அறை, இரண்டு ஆசிரியர் அறை, மேடை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கட்டப்படவுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.