146 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட்!!

துபாய்:
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டுள்ளன. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 146 ரன்களில் ஆட்டமிழந்தது.

துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை. அவருக்கு மாற்றாக அணியில் ரிங்கு சிங் விளையாடுகிறார். இலங்கை உடனான கடந்த ஆட்டத்தில் விளையாடாத பும்ரா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் இதில் விளையாடுகின்றனர்.

பாகிஸ்தான் அணிக்காக சாஹிப்ஸாதா ஃபர்ஹான் மற்றும் பஹர் ஸமான் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இந்த இன்னிங்ஸில் 35 பந்துகளில் அரைசதம் விளாசினார் ஃபர்ஹான். இந்திய அணிக்கு எதிராக கடந்த போட்டியிலும் அவர் அரைசதம் பதிவு செய்திருந்தார். இருப்பினும் கடந்த முறை துப்பாக்கி சூடு போஸ் கொடுத்து அரைசதத்தை கொண்டாடினார். அது சர்ச்சையான நிலையில் இந்த முறை பேட்டை மட்டும் உயர்த்திக் காட்டினார்.

வருண் சக்கரவர்த்தி வீசிய முதல் இன்னிங்ஸின் 10-வது ஓவரில் ஃபர்ஹான் ஆட்டமிழந்தார். அவர் 38 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை அவர் விளாசினார்.

அதன் பிறகு பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. சயிம் அயூப் 14, முகமது ஹாரிஸ் 0, ஸமான் 46, ஹுசைன் தலாத் 1, கேப்டன் சல்மான் அலி ஆகா 8, ஷாஹீன் ஷா அப்ரிடி 0, பஹீம் அஷ்ரப் 0, ஹாரிஸ் ரவூஃப் 6, முகமது நவாஸ் 6 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

19.1 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4, வருண் சக்ரவர்த்தி 2, அக்சர் 2, பும்ரா 2 விக்கெட் கைப்பற்றினர். இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற 147 ரன்கள் தேவை.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *