விஷமான உயிர் காக்கும் மருந்து: ‘கோல்ட்ரிப்’ மருந்தை தயாரிக்க அனுமதி அளித்தது யார்?

சென்னை,
இந்தியாவையே உலுக்கும் வகையில் கடந்த மாதம் (செப்டம்பர்) இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் உயிர் பலி சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன. 1 முதல் 7 வயது வரை உள்ள 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறுநீரக செயல் இழப்பால் அடுத்தடுத்து மாண்டு போனார்கள்.

உடனடியாக இறப்புக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டது. பலியான அத்தனை குழந்தைகளும் இருமல் நோய்க்கு சிகிச்சை பெற்றவர்கள் என்பதும், இருமல் குறைய ‘கோல்ட்ரிப்’ என்ற மருந்தை உட்கொண்டதும் தெரியவந்தது.

‘கோல்ட்ரிப்’ என்ற இந்த இருமல் மருந்து காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசென் பார்மா என்ற மருந்து கம்பெனியில் தயாரிக்கப்பட்ட மருந்தாகும்.

அபாயகரமானதாக கருதப்படும் இந்த மருந்து, நாடு முழுவதும் சப்ளை செய்யப்பட்டுள்ளது. உடனடியாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி மத்திய பிரதேச மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டாளர் தினேஷ்குமார் மவுரியா, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநருக்கு கடிதம் ஒன்று எழுதினார். அதில், சம்மந்தப்பட்ட மருந்து கம்பெனியில் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது.

உடனடியாக, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரக அதிகாரிகள் ஸ்ரீ சென் பார்மா மருந்து கம்பெனியில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியானது.

15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்புக்கு காரணமான ‘கோல்ட்ரிப்’ மருந்தில் மை, பெயிண்ட் தயாரிக்க பயன்படுத்தும் ‘டை எத்திலின் கிளைகால்’ என்ற உயிர்கொல்லி ரசாயனம் 48 சதவீதத்திற்கும் அதிகமாக கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக, மருந்து கம்பெனியின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது. தற்போது, கோல்ட்ரிப் இருமல் மருந்தை மருத்துவர்கள் யாரும் பரிந்துரைக்க வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதே நேரத்தில், மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் இறப்புக்கு காரணமான இந்த மருந்தை பரிந்துரை செய்த அரசு மருத்துவர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டார்.

இவர் அரசு மருத்துவர் என்றாலும் தனியாக கிளினிக் நடத்தி வந்துள்ளார். அங்கு சிகிச்சைக்காக வந்த குழந்தைகளுக்கு இந்த இருமல் மருந்தை பரிந்துரைத்துள்ளார்.

48 சதவீதத்துக்கும் அதிகமாக டை எத்திலின் கிளைகால் ரசாயனம் உள்ள கோல்ட்ரிப் மருந்தை எப்படி விற்பனைக்கு வந்தது?. அதற்கு அனுமதி கொடுத்தது யார்? என்ற கேள்வி எழுகிறது. இதுபோன்று எத்தனை மருந்துகள் இன்னும் கடைகளில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன? என்ற சந்தேகமும் மக்கள் மனங்களில் எழுந்துள்ளது.

உயிர் காக்கும் மருந்துகள் விஷயத்தை பொறுத்தவரை, அதில் உள்ள மூலக்கூறுகள் என்னென்ன? என்பதை, எந்த மாநிலத்தில் மருந்து தயாரிப்பு கம்பெனி உள்ளதோ, அந்த மாநில அரசின் சுகாதாரத்துறை அறிக்கையாக கேட்டுப்பெற வேண்டும். அதில் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் ரசாயனம் ஏதும் கலந்திருக்கிறதா? என்பதையும் மருந்து வெளிவரும் முன்பு அரசு பரிசோதனை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *