நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இயற்கை எழில் சூழ்ந்த நெல் வயல்களுக்கு நடுவே அப்பன் வெங்கடாசலபதி கோவில் அமைந்துள்ளது. கோவில்கள் சூழ்ந்த நகரமாக போற்றப்படும் சேரன்மாதேவியில் பழமைவாய்ந்த 9 பெருமாள் கோவில்கள், சிவன் கோவில்கள், அம்மன் கோவில்கள் உள்ளன.
அப்பன் வெங்கடாசலபதி கோவில், விஜயநகர பேரரசு ஆட்சியின்போது கட்டப்பட்டது. இக்கோவில் சுவரில் தமிழ், சமஸ்கிருத எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.
இங்கு அருள்பாலிக்கும் அப்பன் வெங்கடாசலபதியை திருப்பதியில் வீற்றிருக்கும் ஏழுமலையானுக்கு இணையாக வணங்குகின்றனர். பசுமை போர்த்திய வயல்கள், வாழை தோட்டங்களைக் கடந்து இக்கோவிலுக்கு செல்வோருக்கு மன அமைதி, பேரானந்தம் கிடைக்கிறது.
சேர மன்னர் தனது மகளின் வயிற்றுவலிக்கு மருத்துவரிடம் தீர்வு காண முடியாததால் ஜோதிடரை அணுகினார்.
”மகளுக்கு ஏற்பட்ட வயிற்று வலியை தீர்க்க வேண்டும்” என்று வேண்டினார். அதற்கு ஜோதிடர், ”தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள அப்பன் வெங்கடாசலபதியை வணங்கி, உன் மகளுக்கு மிளகு ரசம் வைத்து கொடு” என்று கூறினார்.
அதன்படியே மன்னர், அப்பன் வெங்கடாசலபதியை வணங்கி தனது மகளுக்கு மிளகு ரசம் வைத்து கொடுத்தார். அப்போது, ஆச்சரியப்படும் விதமாக மன்னர் மகள் குணமடைந்தார். எனவே இக்கோவிலில் தயாராகும் மிளகு ரசம் சிறப்பு வாய்ந்தது.
நோய்களை தீர்க்கும் தலம்
இங்குள்ள தாமிரபரணி நதியில் நீராடி அப்பன் வெங்கடாசல பதியை தரிசித்தால் தீராத எந்த கொடிய நோயாக இருந்தாலும் நீங்கும். ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமியை வணங்கி குணம் பெற்றுள்ளனர்.
அவ்வாறு நன்மை கிடைக்கப் பெற்றவர்கள், நேர்த்திக்கடனாக மிளகு அதிகமாக போட்டு வெண்பொங்கல் தயாரித்து கோவிலில் படைத்து பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.
இதேபோன்று திருமணத்தடை நீங்கவும் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் மாதந்தோறும் திருவோண நட்சத்திர தினத்தன்று கோவிலுக்கு வந்து பெருமாளுக்கு பாயசம் படைத்து வழிபட வேண்டும்.
அவ்வாறு தொடர்ந்து 9 மாதங்கள் கோவிலுக்கு வந்து பாயசம் படைத்து வழிபட்ட பலரும் குழந்தை பாக்கியம் கிடைத்ததாக தெரிவிக்கின்றனர்.
கல்வெட்டுகள்
கோவிலில் மூலவர் அப்பன் வெங்கடாசலபதி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். கோவிலின் தாயார் அலர்மேல் மங்கை மற்றும் பத்மாவதி தாயார், உற்சவர் சீனிவாசன். கோவிலில் சுமார் 60 பழங்கால கல்வெட்டுகள் உள்ளன.
அவற்றில் முதன்மையானது கி.பி. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னர் ஜடாவர்மன் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தது. அதில், மன்னர் ஜடாவர்மன் தனது மைத்துனர் ரவிவர்மாவின் ஆலோசனையின்பேரில், கி.பி 1200-ம் ஆண்டு சேரன்மாதேவி என்ற சதுர்வேதி மங்கலத்தின் கிழக்கு கிராமமான கருங்குளப்பற்று நிலத்தை இறைவனுக்கு தினசரி காணிக்கை செலுத்துவதற்கும், இந்த கோவிலில் வேதங்கள் மற்றும் புராணங்களை ஓதுவதற்கும் முற்றிலும் வரி விலக்கு அளித்து உத்தரவிட்டது பொறிக்கப்பட்டு உள்ளது.
கோவில் தோற்றம் திருவிழாக்கள்
கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவம், பங்குனி உத்திரம், மாசி மகம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, சிரவண தீபம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடும், கருட சேவையும் நடைபெறுகிறது. திருவோண நட்சத்திர தினம் சிறப்பு வாய்ந்ததாக கொண்டாடப்படுகிறது.
அமைவிடம்
இக்கோவில், சேரன்மாதேவி – கல்லூர் – நெல்லை சாலையில் ராமசாமி கோவிலுக்கு வடக்கே சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வீரவநல்லூரில் இருந்து 6 கி.மீ., நெல்லையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது.