அமெரிக்கா;
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார். பல பொருட்களின் இறக்குமதிக்கு தொடர்ந்து வரிகளை விதித்து வருகிறார்.
சமீபத்தில் சமையலறை மற்றும் கழிவறை உபகரணங்களுக்கு 50 சதவீத வரியும், பர்னிச்சருக்கு 30 சதவீத வரியும் விதித்தார். மேலும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீத வரி விதிப்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில் லாரிகள் இறக்குமதிக்கு 25 சதவீத வரி விதிப்படுவதாக டிரம்ப் அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து நடுத்தர மற்றும் கனரக லாரிகளுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
டெலிவரி லாரிகள், குப்பை லாரிகள், பொது பயன்பாட்டு லாரிகள், போக்குவரத்து மற்றும் பள்ளி பஸ்கள், டிராக்டர்-டிரெய்லர் லாரிகள், கனரக தொழில் வாகனங்கள் ஆகியவை இந்த வரி விதிப்புக்குள் வரும்.
அமெரிக்காவிற்கு நடுத்தர மற்றும் கனரக லாரிகளை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடுகளாக மெக்சிகோ, கனடா உள்ளன. டிரம்ப்பின் புதிய வரி விதிப்பால் இந்த இரு நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும்.
2023-24ம் நிதியாண்டில் அமெரிக்காவிற்கு இந்தியாவின் வாகன உதிரிபாக ஏற்றுமதி 6.79 பில்லியன் டாலராக இருந்தது. இந்த புதிய வரி விதிப்பால் இந்திய வாகன உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு தான் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.