நீலகிரி,
நீலகிரி மாவட்டம், உதகை சேரிங்கிராஸ் கமர்ஷியல் சாலை பகுதியில், நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் சார்பில் நவீன மயமாக்கப்பட்ட ஆவின் பாலகத்தை கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, ஆவின் பொருட்களின் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் தெரிவித்ததாவது:
நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தால் நடத்தப்பட்டு வந்த ஆவின் பாலகம் தற்போது நவீன மயமாக்கப்பட்டு, முழுநேர சேவை வழங்கும் நிலையமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்பாலகத்தில் ஆவின் தயாரிப்புகளான பால் பாக்கெட், சுடுபால், பாதாம் பால், தயிர், பால்கோவா, நெய், வெண்ணெய், பன்னீர், ஐஸ்கிரீம், இனிப்பு மற்றும் கார வகைகள் உட்பட அனைத்து உபபொருட்களும், இண்ட்கோசர்வின் தயாரிப்புகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காஜிகட்லி, அல்வா, மைசூர்பாக்கு, கேரட் அல்வா, மிக்சர், முறுக்கு போன்ற இனிப்பு மற்றும் காரப்பொருட்களும் விற்பனைக்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா, ஆவின் பொது மேலாளர் ராஜேஷ்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, உதகை வருவாய் கோட்டாட்சியர் டினு அரவிந்த், இண்ட்கோசர்வ் விற்பனை மேலாளர் மகேந்திரன், துணைப்பதிவாளர் (பால்வளம்) செந்தில்குமார், மேலாளர்கள் கார்த்திக் (விற்பனை பிரிவு), நந்தகோபால் (கணக்கு), திருமுருகன் (பொறியியல்), செல்வகணபதி (பால் உற்பத்தி), கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அய்யனார், உதகை வட்டாட்சியர் சங்கர்கணேஷ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.