கோவை,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேக்கரி மற்றும் இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்பனை செய்யும் தயாரிப்பாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், மேலும் பண்டிகை காலங்களில் மட்டும் இனிப்பு மற்றும் காரம் தயாரித்து விற்பனை செய்பவர்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்தார்.
இனிப்பு, கார வகைகள் தயாரிப்ப வர்கள் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.
இனிப்பு, காரம் தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவை மீறிய நிறமிகளையோ பயன்படுத்தக் கூடாது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், உணவுப் பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006 பிரிவு 58-ன் படி அபராதம் விதிக்கப்படும்.
இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் அல்லது இருப்பில் வைக்கும் போது அச்சிடப்பட்ட செய்தித்தாள்களை எண்ணெய் உறிஞ்சும் வகையில் பயன்படுத்தக் கூடாது. சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பேப்பர் அல்லது கவர்களில் பொட்டலமிட கூடாது. மீறினால் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம் 2006-ன் படி அபராதம் விதிக்கப்படும்.
தயாரிப்பில் பயன்படுத்தப்படும் எண்ணெய், நெய் மற்றும் மூலப்பொருட்களின் விவரங்கள் அதற்கான கேன், டின் லேபிளில் முழுமையாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
பால் சார்ந்த இனிப்பு வகைகள் தனியாக இருப்பு வைக்கப்பட வேண்டும். அவற்றின் பயன்பாட்டு காலம் தெளிவாக லேபிளில் குறிப்பிடப்பட வேண்டும்.
பால் சார்ந்த இனிப்பு வகைகள் மற்ற இனிப்புகளுடன் கலந்து வைக்கக் கூடாது. தனியாக பேக் செய்து வழங்க வேண்டும்.
இனிப்பு மற்றும் கார வகைகள் தூய்மையான குடிநீரைக் கொண்டு தயாரிக்கப்பட வேண்டும். தயாரிப்பின் பின் பாத்திரங்கள், உபகரணங்கள் சுத்த மாக கழுவப்பட்டிருக்க வேண்டும்.
சில்லறை இனிப்பு வகைகள் விற்பனை செய்யும் போது, தயாரிப்பு தேதி, பயன்படுத்தும் தேதி, எண்ணெய், நெய், வானஸ்பதி பயன்படுத்தப்பட்டதா என்பன போன்ற விவரங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
பண்டிகை காலங்களில் இனிப்பு, காரம் தயாரிப்பவர்கள் http://foscos.fssai.gov.in இணையதளத்தின் மூலம் எப்எஸ்எஸ்ஏஐயில் பதிவு, உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பாஸ்டேக் பயிற்சி சான்றிதழ் மற்றும் மருத்துவத் தகுதி சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் தயாரிப்பாளர் முகவரி, தயாரிப்பு, பேக்கிங் தேதி, சிறந்த பயன்பாட்டு நாள், சைவ, அசைவ குறியீடு ஆகியவை அவசியம் குறிப்பிடப்பட வேண்டும். பொருட்கள் சுகாதாரமான சூழலில், ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாமல் விற்பனை செய்யப்பட வேண்டும்.
எப்எஸ்எஸ்ஏஐ வழிகாட்டுதலின் படி, விற்பனைக்கு காட்சிப்படுத்தப் பட்டுள்ள அனைத்து இனிப்பு வகைகளுக்கும் தயாரிப்பு தேதி மற்றும் உண்ணத்தகுந்த காலம் போர்டில் குறிப்பிடப்பட வேண்டும்.
பணியாளர்கள் கையுறை, முடிக்கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்துதான் பணியாற்ற வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் இனிப்பு அல்லது காரம் தயாரிக்கப் பயன்படுத்தக் கூடாது. இதனை ரூக்கோ திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் வழங்க வேண்டும்.
பொதுமக்கள் இனிப்பு மற்றும் கார வகைகள் வாங்கும் போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு, உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும்.
பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களில் விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டியது அவசியம்.
புகார்கள் இருப்பின் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம். மேலும் “tnfoodsafety consumer” செயலி மூலம் புகார் செய்யலாம் என கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்தார்.