சென்னை:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அனயாரா என்ற இடத்தில் வாராஹி பஞ்சமி தேவி கோவில் அமைந்துள்ளது. கேரளாவில் உள்ள ஒரே வாராஹி பஞ்சமி கோவில் என்று கூறப்படும் இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
இந்தநிலையில் நடிகர் விஷால் அந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அவர் ஒரு சினிமா படப்பிடிப்பிற்காக கேரளா வந்திருந்ததாக கூறப்படுகிறது. அதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல ஓட்டலில் தங்கியிருந்த நடிகர் விஷால், அனயாராவில் உள்ள வாராஹி பஞ்சமி கோவிலை பற்றி அறிந்தார்.
இதையடுத்து அவர் தனது மேலாளருடன் வாராஹி பஞ்சமி கோவிலுக்கு சென்றார். அவர் சாதாரண உடையிலேயே கோவிலுக்கு சென்றார். பிரபல திரைப்பட நடிகரான விஷால் சாதாரண உடையில் வருவதை பார்த்த பக்தர்கள், அவரை கைதட்டி வரவேற்றனர்.
இதையடுத்து நடிகர் விஷால் கோவிலுக்கு சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர், “கை வட்டக குருதி பூஜை” என்ற சிறப்பு பூஜை செய்தார். மாவேலிக்கரை பிரசாந்த் நம்பூதிரி தலைமையில் அவருக்கு “கை வட்டக குருதி பூஜை” செய்யப்பட்டது.
“கை வட்டக குருதி பூஜை” என்பது கேரள கோவில்களில் செய்யப்படும் சிறப்பு வாய்ந்த சடங்கு ஆகும். இது தீய சக்திகளை அகற்றி, தடைகளை நீக்கி வாழ்க்கையில் நன்மைகளை கொண்டுவர உதவும். முக்கியமாக எதிர்மறை சக்திகளையும், தடைகளையும் நீக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.
இந்த பூஜையை தொடர்ந்து நடிகர் விஷாலுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்பு சிறிது நேரம் கோவிலில் அமர்ந்துவிட்டு நடிகர் விஷால் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.