சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா: நினைவு நாணயம், தபால் தலையை வெளியிட்ட பிரதமர் மோடி !!

புட்டபர்த்தி,

புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். முன்னதாக சத்ய சாய்பாபாவின் மகா சமாதியில் அவர் வழிபட்டு, தியானத்தில் ஈடுபட்டார்.

சாய்பாபாவின் நினைவாக 100 ரூபாய் சிறப்பு நாணயத்தையும், தபால் தலையையும் அவர் வெளியிட்டார்.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926ம் ஆண்டு நவம்பர் 23–ந்தேதி சத்யசாய் பாபா பிறந்தார்.ஆன்மிக பணிகளுடன் ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கினார்.

புட்டபர்த்தியில் இவர் ஏற்படுத்திய ஸ்ரீ சத்யசாய் அறக்கட்டளை சார்பில் பிரம்மாண்ட இலவச மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் இன்றும் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இவரது போதனைகள் மற்றும் சேவையால் ஈர்க்கப்பட்டு பக்தர்களாக மாறினார்கள்.

புட்டபர்த்தியில் சத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் 13ம் தேதி தொடங்கியது. 24–ந்தேதி வரை கோலாகலமாக நடக்கிறது. இதில் உலகின் 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை புட்டபர்த்தி வந்தார்.

பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிரசாந்தி நிலையம் சென்ற பிரதமர் மோடி, மகா சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

அங்கு வேத பண்டிதர்கள் மந்திரங்களை முழங்க, மோடி சிறிது நேரம் தியானம் செய்தார்.

தொடர்ந்து பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார்.

முதலில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பாடகி சுதா ரகுநாதன் குழுவினரின் இசை நிகழ்ச்சி, இசைக்கலைஞர் சிவமணியின் டிரம்ஸ் இசை நிகழ்ச்சி, நாட்டியக்கலைஞர்களின் நடனங்களை பிரதமர் மோடி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கண்டு ரசித்தனர்.

தொடர்ந்து நடந்த விழாவில், நடிகை ஐஸ்வர்யா ராய், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் சத்ய சாய்பாபாவின் மகிமைகளை பற்றி உரையாற்றினர்.

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரும் பேசினர்.

தொடர்ந்து பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் பாரம்பரியத்தை கவுரவிக்கும் விதமாக 100 ரூபாய் நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.

தொடர்ந்து சத்ய சாய்பாபாவின் பெருமைகள் பற்றியும், அவரது சேவை குறித்தும் பிரதமர் மோடி உரையாற்றினார்.

பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:–

ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் இந்த பிறந்தநாள் நூற்றாண்டு விழா வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, தெய்வீக ஆசீர்வாதம் ஆகும். சத்ய சாய்பாபா இப்பொழுது நம்முடன் இல்லை என்றாலும், அவரது போதனைகள் மற்றும் அன்பு, சேவை மனப்பான்மை ஆகியவை உலகெங்கும் கோடிக்கணக்கானவர்களை வழிநடத்துகிறது.

சத்ய சாய்பாபா மனித வாழ்க்கையில் சேவை என்பதை இதயத்தில் கொண்டு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். புட்டபர்த்தியின் புனித பூமியில் இருப்பது ஒரு சிறந்த ஆன்மிக அனுபவம். சாய்பாபாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தும் பாக்கியம் இன்று எனக்கு கிடைத்தது.

சத்ய சாய்பாவின் நூற்றாண்டு விழா என்பது உலகளாவிய அன்பு, அமைதி மற்றும் சேவைக்கான திருவிழாவாக மாறி உள்ளது. ஏழை மக்களுக்கான நமது சமூக பாதுகாப்பு திட்டங்கள் சர்வதேச அரங்குகளில் போற்றப்படுகின்றன.

உள்நாட்டு தயாரிப்புக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நாம் எட்ட முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *