ஸ்டான்லி மருத்துவமனை அருகில் ரூ.147 கோடியில் 776 அடுக்குமாடி குடியிருப்புகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்!

சென்னை,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னை ஏழுகிணறு, அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில், 147 கோடி ரூபாய் செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட “முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்” திறந்து வைத்தார்.

மேலும் வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 144 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.

147 கோடிரூபாய் செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் தரைதளம் மற்றும் 9 தளங்களுடன் இரண்டு தொகுதிகளாக 3,26,609 சதுர அடி கட்டடப் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட “முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்” இவை.

குடியிருப்புகளை திறந்துவைத்துப்பின்னர், அங்கன்வாடி மையம், நகர்ப்புற நலவாழ்வு மையம், நியாய விலைக் கடைகள், முதல்வர் படைப்பகம், நவீன நூலகம், உடற்பயிற்சிக்கூடம், திறந்தவெளி அரங்கம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி ஆகியவற்றை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர், முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும், நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார்.

ஒதுக்கீட்டு ஆணைகளை பெற்றுக்கொண்ட பயனாளிகள் முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

“முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளில்”உள்ள ஒவ்வொரு குடியிருப்பும் 415 சதுர அடி பரப்பளவில் சமையலறை, கூடம், படுக்கைஅறை, கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதோடு மாற்றுத்திறனாளிகளுக்கென 40 குடியிருப்புகளும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்”வளாகத்திலுள்ள உட்கட்டமைப்பு வசதி கட்டடத்தில் “அங்கன்வாடி மையம்”, நகர்ப்புற நல வாழ்வு மையம், “நியாய விலைக் கடைகள்”,“முதல்வர் படைப்பகம்”, “நவீன நூலகம்”, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரத்தியேக “உடற்பயிற்சிக் கூடம்” அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இவ்வளாகத்தில் மாணவச் செல்வங்களை நெறிப்படுத்தும் வகையில் “திறந்தவெளி அரங்கம்”, “குழந்தைகள் விளையாட்டுப் பகுதி”, பூங்காக்கள், 8 எண்ணிக்கையிலான மின்தூக்கி வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள், சீரான மின்சாரம் வழங்கிடும் வகையில் இரண்டு எண்ணிக்கையிலான 500 KVA திறன் கொண்ட மின்மாற்றிகள், 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர் தேக்கத் தொட்டிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தீயணைப்பு குழாய் தொட்டிகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றியழகன், தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப. ரங்கநாதன்,

நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உறுப்பினர் செயலர் கோ.பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், குடிநீர் வழங்கல் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா சிங், துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *