சென்னை:
அடுத்த 5 ஆண்டுகளில், அண்ணா பல்கலைக்கழகத்தை நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள்ளும், உலக அளவிலான கியூஎஸ் தரவரிசையில் முதல் 150 இடங்களுக்குள்ளும் இடம்பெறச் செய்ய புதிய செயல்திட்டம் வகுக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் கிளாஸ், நவீன தொழில்நுட்ப ஆய்வகங்கள், புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுடன் இணைந்து மாணவர்கள் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் இணையவழி படிப்புகளை படிக்க ஏற்பாடு செய்யப்படும்.
அரசு பல்கலைக்கழகங்களின் நிதி பற்றாக்குறையைக் குறைக்க அவற்றுக்கான தொகுப்பு நிதி ரூ.700 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
மேலும், கல்வி செயல்பாடுகள், ஆராய்ச்சிப் பணிகள், ஆசிரியர்களுக்கான தொடர் பயிற்சி, பாடத்திட்ட மேம்பாடு, தேர்வுமுறை போன்ற பணிகளுக்காக ரூ.200 கோடி கொண்ட சிறப்பு தொகுப்பு நிதியம் உருவாக்கப்படும்.
வளர்ந்துவரும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு அரசு பொறியியல் கல்லூரிகளில் ஏஐ (செயற்கை நுண்ணறிவு), இணைய பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி), மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ், மின்வாகன தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் பொறியியல் தொடர்பான புதிய பட்டப்படிப்புகள் வரும் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்.
அதேபோல், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் திறன்மிகு உற்பத்தி, இணைய பாதுகாப்பு மற்றும் நெட் வொர்க்கிங், உணவு தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பம், ட்ரோன் டிசைன் மற்றும் அப்ளிகேஷன் தொடர்பான புதிய டிப்ளமோ படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.
உயர்கல்வி சேர்க்கை உயர்வு: புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட முன்னோடி திட்டங்களால் தமிழகத்தில் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உயர்கல்வி தேவைகளை நிறைவேற்றும் வகையில், குன்னூர், நத்தம், ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்), மானாமதுரை, முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்), திருவிடைமருதூர் (தஞ்சை மாவட்டம்), பெரம்பலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 10 இடங்களில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.