சென்னை:
20 ஆண்டுகள் பழைய வாகனங்களின் தகுதி சான்றிதழ் கட்டணத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அதிரடியாக உயர்த்தியுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்க பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசுவைக் கட்டுப்படுத்த மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வந்தது. தற்போது இந்த சட்டத்திருத்தங்கள் அமலாகியுள்ளன.
வயதை பொறுத்து கட்டணம்: அதன்படி, ஒவ்வொரு வாகனங்களுக்கும் அதன் வயதைப் பொறுத்து தகுதி சான்றிதழ் கட்டணம் வசூலிக்கப்படும். 10-15 ஆண்டுகள், 15-20 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகளுக்கும் மேல் என 3 பிரிவுகளாக வாகனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மாற்றம் 2, 3, 4 சக்கர வாகனங்கள், இலகு ரககார்கள், நடுத்தர மற்றும் கனரக வாகனங்களுக்கும் பொருந்தும். குறிப்பாக கனரக வாகனங்களுக்கான தகுதிச்சான்று கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு அதிக கட்டணம் இருந்த நிலையில் தற்போது 10 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கே கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுக்கு மேல்… அதன்படி, 20 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள கனரக லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கு தகுதி சான்றிதழ் கட்டணம் ரூ.3,500-ல் இருந்து ரூ.25 ஆயிரமாகவும், நடுத்தர வணிக வாகனங்களுக்கான கட்டணம் ரூ1,800-ல் இருந்து ரூ.20 ஆயிரமாகவும், வணிகப் பயன்பாட்டில் உள்ள கார் போன்ற வாகனங்களுக்கான கட்டணம் ரூ.10,000-லிருந்து ரூ.15 ஆயிரமாகவும், ஆட்டோ போன்ற 3 சக்கர வாகனங்களுக்கு ரூ.7000-ம் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகள் பழைய தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு, 2 சக்கர வாகனங்களுக்கு ரூ.1000-ம், 3 சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் ரூ.2000 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
15 முதல் 20 ஆண்டுகள் பழைய தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு, 2 சக்கர வாகங்களுக்கு ரூ.500-ம், 3 சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் ரூ.1000 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.
15 ஆண்டுகளுக்குள்ளான வாகனங்களுக்கு 2 சக்கர வாகனங்களுக்கு ரூ.400-ம், 3 சக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு ரூ.1000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.