சென்னை:
தமிழில் ராப் இசைக்கு பெரிய வரலாறு உள்ளது என்று ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.
வினீத் வரபிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாஷமக்கான்’.
வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து இப்படத்தினை உருவாக்கியுள்ளது படக்குழு. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதன் தலைப்பு மற்றும் ப்ரோமோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மட்டுமே கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் ஹரிஷ் கல்யாண் பேசிய போது, “தாஷமக்கான் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம், தமிழ்நாட்டிற்கு கறி சப்ளை செய்யும் இடம் தான் தாஷமக்கான். நான் இப்படத்தில் ராப்பராக நடித்துள்ளேன்.
தமிழில் ராப் இசைக்கு பெரிய வரலாறு உள்ளது. பலர் இதற்கு முன் ராப் இசையில் கலக்கியுள்ளனர். இண்டி மியூசிக்கிலும் பலர் கலக்கி வருகின்றனர். எனக்கு அவர்கள் எல்லோரும் தான் இன்ஸ்பிரேஷன். என்னுடன் நடித்த ராப்பர்ஸ் அனைவருக்கும் நன்றி.
இந்த மாதிரி திறமையாளர்களை அடையாளப்படுத்திய இயக்குநருக்கு நன்றி. இசை இந்தப்படத்தில் மிக முக்கியம். பிரிட்டோ கலக்கியுள்ளார். ராப், பேட்டில் இசை, ரொமான்ஸ் என பல ஜானரில் பாடல்கள் உள்ளது. சூப்பராக இசையமைத்துள்ளார்.
இந்த கதாபாத்திரத்திற்கு நான் செட்டாவேனா எனச் சந்தேகம் இருந்தது. இயக்குநர் எல்லோருமே தயங்கினார்கள் என்றார். அப்போதே நாம் செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டேன்.
எல்லோருமே பெரும் உழைப்பைத் தந்துள்ளனர். சுனில் சார், சத்யராஜ் சார் இருவரும் முக்கியமான ரோல் செய்துள்ளனர். இருவருக்கும் நன்றி.
ப்ரீத்தி நன்றாக நடித்துள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக உங்களுக்கு புது அனுபவமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் ஹரிஷ் கல்யாண்.