சென்னை:
11.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 11.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள, மேம்படுத்தப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, 30 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 51 புதிய பேருந்துகளின் இயக்கத்தை உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கவும், சென்னையை உலகின் முக்கியமான நகரமாக உருவாக்கவும் அனைத்து துறைகளின் சார்பாக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதோடு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய பேருந்து முனையங்கள் அமைத்தல், பேருந்து நிலையங்களை பயணிகள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளோடு மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை நவீன பேருந்து நிலையம்: கருணாநிதி போக்குவரத்து மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபொழுது 10.4.1967 அன்று அம்பத்தூர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை புனரமைக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் 14.03.2024 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 11.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
சுமார் 1.63 ஏக்கர் பரப்பளவு கொண்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில், 26,346 சதுரடியில் தரைதளம் மற்றும் 2 தளங்களுடன் கூடிய பல்பொருள் அங்காடி, 11 எண்ணிக்கையிலான கடைகள், அலுவலக அறை, மூத்த குடிமக்களுக்கான காத்திருப்பு அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயண சீட்டுகள் வழங்கும் அறை, உணவகங்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கான தங்குமிடங்கள், மின்தூக்கி வசதிகள், ஏடிஎம் வசதிகள், 20 பேருந்துகள் நிற்கும் வசதி கெண்ட 3 நடைமேடைகள், பேருந்து வழித்தடங்களின் விபரங்கள் கொண்ட பதாகைகள், பயணிகள் இருக்கை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் அம்பத்தூர் பேருந்து பணிமனை சார்பில் தினந்தோறும் 53 வழித்தடங்களில் 75 விடியல் பயணத் திட்ட பேருந்துகள், 49 டீலக்ஸ் பேருந்துகள், 15 சிறிய பேருந்துகள் என மொத்தம் 139 பேருந்துகள் மூலமாக 2,026 நடைகள் இயக்கபட்டு பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
அம்பத்தூர் பேருந்து பணிமனை உள்பட அம்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் மற்றும் அம்பத்தூர் பேருந்து நிலையம் வழியாக செல்லும் மொத்தம் 81 வழித்தடங்களில் 287 பேருந்துகள் மொத்தம் 3,126 நடைகள் பயணம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு பேருந்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 16 புதிய தாழ்தள பேருந்துகள் மற்றும் 35 மகளிர் விடியல் திட்ட புதிய பேருந்துகள் என மொத்தம் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 51 புதிய பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.