புதுடெல்லி:
“அரசியலமைப்பின் சக்திதான், என்னைப் போன்ற ஒரு எளிய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்த ஒருவர், 24 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் தொடர்ந்து பணியாற்ற உதவியது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு தினத்தையொட்டி, அவர் வெளியிட்ட குடிமக்களுக்கு எழுதிய கடிதத்தில், “நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
அரசியலமைப்பு கடமைகள் வலுவான ஜனநாயகத்திற்கான அடித்தளம். வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியலமைப்பு தினத்தை கொண்டாட வேண்டும்.
இந்த தினத்தில் அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். அவர்களின் தொலைநோக்கு பார்வை விக்சித் பாரத் (சுயசார்பு இந்தியா) என்ற இலக்கை நோக்கி நாம் முன்னோக்கி செல்ல ஊக்குவிக்கின்றன.
அரசியலமைப்பின் சக்திதான், என்னைப் போன்ற ஒரு எளிய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்த ஒருவர், 24 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் தொடர்ந்து பணியாற்ற உதவியது.
2014 ஆம் ஆண்டு, நான் முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு வந்து, ஜனநாயகத்தின் மிகப்பெரிய கோயிலின் படிகளைத் தொட்டு வணங்கிய தருணங்களை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன்.
இந்த அரசியலமைப்பு என்னைப் போன்ற பலருக்கு கனவு காணும் சக்தியையும், அந்தக் கனவுகளை நனவாக்கும் வலிமையையும் அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனது எக்ஸ் தளத்தில், “கண்ணியம், சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றுக்கு நமது அரசியலமைப்பு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. இது நமக்கு உரிமைகளை வழங்கும் போதே, குடிமக்களாகிய நமது கடமைகளையும் நினைவூட்டுகிறது.
இந்தக் கடமைகளை நிறைவேற்ற நாம் எப்போதும் முயற்சிக்க வேண்டும். இது வலுவான ஜனநாயகத்தின் அடித்தளமாகும். நமது செயல்கள் மூலம் அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்த உறுதியேற்போம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.