நியூயார்க்:
அமெரிக்காவுக்கு வந்த திறமையான இந்தியர்களால் அமெரிக்க தேசம் பலனடைந்துள்ளது என உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் கூறியுள்ளார்.
அவருடன் அண்மையில் செரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் உரையாடி இருந்தார்.
அது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், அதில் எலான் மஸ்க் பகிர்ந்து குறித்து விரிவாக பார்ப்போம். இதில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள், அமெரிக்க குடியேற்ற விதிகள் மற்றும் தனது குடும்பம் குறித்தும் மஸ்க் பேசியுள்ளார்.
“அமெரிக்கர்களின் பணியை பிற நாட்டினர் பறிப்பதாக சொல்லும் கூற்றை பொறுத்த வரையில் அது எந்த அளவுக்கு உண்மை என எனக்கு தெரியவில்லை.
நிச்சயம் திறன் கொண்ட பணியாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளது என்பதை எனது நேரடி அனுபவத்தில் இருந்து சொல்ல முடியும்.
அவர்களை கண்டறிவது பெரிய சவாலாக உள்ளது. சவாலான பணிகளை மேற்கொள்ள திறமைசாலிகள் வேண்டும். எனது நிறுவனம் அதில் கவனம் செலுத்துகிறது.
எல்லை பகுதிகளில் சட்டவிரோத குடியேற்றத்தை நிச்சயம் தடுத்தாக வேண்டும். முந்தைய பைடன் தலைமையிலான ஆட்சியில் எல்லை பகுதிகளில் பலர் சட்டவிரோதமாக குடியேறினர். அதன் மூலம் ஆதாயம் அடைந்தனர். அதனால் சட்டவிரோத குடியேற்றம் கூடாது.
அமெரிக்காவுக்கு வந்த திறமையான இந்தியர்களால் அமெரிக்க தேசம் பெரிதும் பலனடைந்துள்ளது.
அமெரிக்காவுக்கு திறமைசாலிகளின் தேவை உள்ளது. எனது நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் திறன் கொண்ட நபர்களுக்கு சராசரிக்கும் கூடுதலான ஊதியத்தை வழங்குகிறது.
அதே நேரத்தில் சில நிறுவனங்கள் எச்1-பி விசாவை தவறாக பயன்படுத்துகின்றன. அது மோசமான போக்கு. அதை நிச்சயம் தடுத்தாக வேண்டும்.
ஆனால், அதற்காக எச்1-பி விசா வழங்குவதையே நிறுத்த வேண்டும் என சொல்வதை ஏற்க முடியாது. ஏனெனில் இங்கு திறமைசாலிகளுக்கு தேவை உள்ளது.
எனது மகன் பெயர் சேகர்: எனது இணையர் ஷிவோன் ஜிலிஸ் உடன் நான் பெற்ற மகன்களில் ஒருவருக்கு சேகர் என்ற இந்திய வம்சாவளியை சுட்டும் வகையிலான பெயரை சூட்டியுள்ளோம்.
சந்திரசேகரின் நினைவாக இந்த பெயரை வைத்துள்ளோம். ஷிவோன் ஜிலிஸின் முன்னோர்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். அது எப்படி என்று எனக்கு தெரியாது. அதனால் இந்த பெயரை வைத்தோம்” என அவர் தெரிவித்தார்.
1983-ல் நோபல் பரிசு வென்ற இயற்பியலாளர் சந்திரசேகரின் நினைவாக இந்த பெயரை தனது மகனுக்கு மஸ்க் சூட்டியுள்ளதாக தகவல்.
ஷிவோன் ஜிலிஸ் – மஸ்க் இணையருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். 2021-ல் இரட்டை குழந்தைகள், 2024 மற்றும் 2025-ல் தலா ஒரு குழந்தையையும் அவர்கள் பெற்றனர்.