இலங்கையில் டிட்வா புயலுக்கு 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 25,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிற்கதியான நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
இலங்கையில் டிட்வா புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் கொழும்புவில் நேற்று பெய்த கனமழைக்கு நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது:
டிட்வா புயல் இலங்கையின் மத்திய பகுதியை கடுமையாக பாதித்துள்ளது. மண்சரிவு மற்றும் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்ததால் சாலை களில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனை அப்புறப்படுத்தும் பணியில் பேரிடர் மேலாண்மை மைய (டிஎம்சி) குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
228 பேர் காணவில்லை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி இதுவரை சுமார் 200 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன 228 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 25,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை இழந்து தவிப்பில் உள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 1,47,000 பேர் மீட்கப்பட்டு அரசு அமைத்துள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கெலனி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கொழும்புவின் வடக்கு பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயல் நேற்றுமுன்தினம் இந்தியாவை நோக்கி நகர்ந்ததையடுத்து மீட்புப் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய விமானப் படை: இலங்கையில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஆபரேஷன் ‘‘சாகர் பந்து’’ பெயரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக சேட்டக் ஹெலிகாப்டர்கள் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தியா-இலங்கை இடையே வலிமையான நட்புறவை எடுத்துக்காட்டும் விதமாக நெருக்கடியான இந்த நேரத்தில் இந்திய விமானப் படையின் சி-130ஜே விமானம் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு நேற்று காலை 10 மணியளவில் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கியது.
வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், “இலங்கையில் வெள்ள நிவாரணப் பணிகளில் அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து இந்தியாவின் என்டிஆர்ப் குழுவினர் தொடர்ந்து பணியாற்றுவர்’’ என்று தெரிவித்துள்ளார்.