கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் மகாமகத் திருவிழா !!

தஞ்சாவூர்
கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது. கும்பகோணம் மகாமகத் திருவிழா தொடர்புடைய 12 சைவ திருத்தலங்களில் முதன்மையான இத்தலத்தில் ஸ்ரீ மங்களாம்பிகா சமேத ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார்.

இக்கோவிலில், கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், வரும் 2028ம் ஆண்டில் மகாமக விழா நடைபெற உள்ள சூழலில், கோவில் கும்பாபிஷேக்தை நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, கும்பாபிஷேகம் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் நடந்து வந்தன. ரூ.18 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 24-ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

அன்றைய தினம் கஜ பூஜை, விக்னேஸ்வர, பிரம்மச்சாரி பூஜைகளும், மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி நடைபெற்றது. 25ம் தேதி நவக்கிரஹ ஹோமம், கோ பூஜை, அஸ்வ பூஜை, சுவாசினி பூஜைகளும், மாலை ரக்க்ஷோக்ன ஹோமம், க்ராம சாந்தி, திச ஹோமம் நடைபெற்றது.

26ம் மூர்த்தி ஹோமம், ப்ரஸன்ன அபிஷேகம், ஆச்சார்ய வர்ணம், மாலை அங்குரார்ப்பணம், சோம கும்ப பூஜை, ஸ்தல ஆச்சார்யா ரக்சாபந்தனம், யாக சாலை நிர்மாணம் நடைபெற்றது. மேலும், ஒன்றரை அடி முதல் 9 அடி உயரமுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட 44 கலசங்களில், காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து, 10 ஆயிரம் சதுரடி பரப்பளவில், 99 குண்டங்கள் கூடிய யாகசாலை அமைக்கப்பட்டு, கடந்த மாதம் 27ம் தேதி முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக யாகம் துவங்கியது. இதையடுத்து 28ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜையும், 29ம் தேதி நான்கு மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜையும், 30ம் தேதி ஆறு மற்றும் ஏழாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன.

இன்று (1.12.2025) அதிகாலை 3 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, எட்டாம் கால யாக சாலை பூஜை, புண்யாஹவாசனம், 3.30 மணிக்கு பிம்ப சுத்தி, ரக்சாபந்தனம், 5.00 மணிக்கு பரிவார பூர்ணாஹூதியுடன் கடம்புறப்பாடாகி, சிவச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, சிவவாத்தியங்கள் இசைக்க, காலை 6.45 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து 7.15 மணிக்கு மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் மூலவர் அபிஷேகம், விசேஷ அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, கோவி.செழியன், காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *