தஞ்சை:
தமிழக முதல்வர் ஸ்டாலின் நோய் நொடி இல்லாமல் எல்லா வளமும் நலமும் பெற்ற 2026-ல் மீண்டும் அரியணையில் ஏறுவார் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகம் முழுவதும் இன்று (டிச.1) 31 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதுவரை 3,896 கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ள நிலையில் ஜனவரிக்குள் 4 ஆயிரத்தை கடக்கும்.
இதேபோல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 700 தேர்கள் பராமத்து பணிகள், 80 புதிய தேர்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.
மேலும், சுமார் ரூ.40 கோடி மதிப்பில், 600 கோயில்களில் இருக்கின்ற தேர்களுக்கு கொட்டகை அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் 1,059 கோயில்களில் இருந்து ரூ.8,119 கோடி மதிப்புள்ள, ஆக்கிரமிக்கப் பட்டிருந்த சுமார் 8,022.48 ஏக்கர் நிலங்கள் முழுவதும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த ஆட்சியில் தான் 15 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில வல்லுநர்கள் குழுவில் இருந்து இதுவரை 14,498 பழமையான கோயில்களுக்கு அனுமதி பெறப்பட்டிருக்கின்றது.
அந்த வகையில் திமுக ஆட்சியில் 12,577 கோயில்களில் ரூ.7,147 கோடி மதிப்பீட்டில் 28,658 திருப்பனிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள உபயதாரர்கள் இதுவரை ரூ.1,557 கோடி வழங்கி உள்ளார்கள்.
இந்த நிதி மூலம் 12,017 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன, இறையன்பர்கள் தங்களது நேர்த்தி கடனாக வழங்கும் நன்கொடைகள் முழுமையாக இறைவனுக்கு காணிக்கையாக செலுத்தப்படுகிறது என்பது தான் உண்மை.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நோய் நொடி இல்லாமல் எல்லா வளமும் நலமும் பெற்ற 2026ல் மீண்டும் அரியணையில் ஏறுவார். மானம்பாடி நாகநாத சுவாமி கோயிலை புனரமைப் பதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்படும்.
இதேபோல் சுவாமிமலை முருகன் கோயிலில் அமைக்கப்படும் மின்தூக்கி பொங்கல் பண்டிகைக்குள் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
மேலும், கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள மொட்டை கோபுரத்தில், சுமார் ரூ.3.65 கோடி மதிப்பில் மதிப்பிடு தயாரிக்கப்பட்டு நிர்வாக அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. அங்கு 2026 பிப்ரவரிக்குள் ராஜகோபுரத்திற்கான திருப்பணிகள் தொடங்கப்படும்.
இதே போல் கோபுரங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் வண்ணமயமான மின் விளக்குகளை தமிழக முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார்.
கோயில் நிலத்தில் குத்தகைதாரர்களுக்கு அவரது வாரிசுதாரர்கள், அதற்கு உண்டான சான்றிதழை வழங்கி, சட்டம் என்ன சொல்கிறதோ, அதற்குண்டான பெயர் மாற்றங்கள், அந்தப் பகுதி இணை ஆணையர் அதிகாரத்திற்குட்ப்பட்ட வழங்குவார்.
இதில் ஏதேனும் குறுக்கீடு இருந்தால், அதில் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடுகிறேன். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, அமைச்சர் சேகர்பாபுவுடன் உயர் கல்விதுறை அமைச்சர் கோவி. செழியன், எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.