புதுடெல்லி:
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவையின் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன், எளிய விவசாய பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர், தனது முழு வாழ்க்கையையும் சமூக சேவைக்காக அர்ப்பணித்துள்ளவர் என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி புகாழாரம் சூட்டியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, சி.பி. ராதாகிருஷ்ணன் மாநிலங்களவையின் தலைவராக இன்று தனது பணியை தொடங்கினார்.
அவரை வரவேற்று வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றினார்.
பிரதமர் மோடி தனது உரையில், “குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. அவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இது ஒரு பெருமையான தருணம்.
உங்களை வரவேற்பது பெருமையான தருணம். அவையின் சார்பாக நான் உங்களை மனதார வாழ்த்துகிறேன்.
இந்த அவையின் உறுப்பினர்கள் அனைவரும் அவையின் கண்ணியத்தைப் பேணுவார்கள். அதேபோல், உங்கள் கண்ணியத்தையும் அவர்கள் கவனித்துக்கொள்வார்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
அவையின் கண்ணியத்தை அவர்கள் பேணுவார்கள் என்று உறுதியளிக்கிறேன்.
மாநிலங்களவையின் தலைவர் எளிய குடும்ப பின்னணி கொண்டவர். அவரது குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம்.அவர் தனது மழு வாழ்க்கையையும் சமூக சேவைக்காக அர்ப்பணித்துள்ளார். அரசியல் என்பது அதில் ஒரு பகுதி. ஆனால், அவரது வாழ்வின் நோக்கம் சமூக சேவையாகவே இருந்து வருகிறது.
அவர் சமூகத்துக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். சமூக சேவையில் ஆர்வமுள்ள நம் அனைவருக்கும் அவர் ஒரு உத்வேகமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார்.
ஒரு எளிய குடும்பத்தில் இருந்து உயர்ந்த நிலைக்கு வந்துள்ள அவரது பயணமும் தலைமைத்துவமும் இந்திய ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலத்தைக் காட்டுகிறது.
ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்தபோது பழங்குடி சமூகங்களுடன் நீங்கள் ஏற்படுத்திக்கொண்ட பிணைப்பை நான் நன்கு அறிவேன்.
சிறிய கிராமங்களுக்கும் நீங்கள் சென்ற விதம் குறித்து ஜார்க்கண்ட் முதல்வர் என்னைச் சந்திக்கும்போதெல்லாம் பெருமையுடன் கூறுவார்.
ஹெலிகாப்டர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களிடம் இருக்கும் வாகனத்தைக் கொண்டு பயணத்திருக்கிறீர்கள்.
இரவு நேரங்களில் சிறிய கிராமங்களில்கூட நின்று அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டிருக்கிறீர்கள். ஆளுநர் பதவியை புதிய உயரங்களுக்கு நீங்கள் கொண்டு சென்ற விதத்தை நாங்கள் அனைவரும் அறிவோம்.
மக்கள் சில நேரங்களில் தங்கள் பதவியின் சுமையை உணர்கிறார்கள். சில சமயங்களில் அவர்கள் நெறிமுறைகளுக்கு (புரட்டோகால்) உட்பட்டு செயல்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால், நீங்கள் எந்த நெறிமுறைகளையும் கொண்டிருக்கவில்லை என்பதை நான் கவனித்திருக்கிறேன். அவரை நீண்ட காலமாக அறிந்திருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
பொது வாழ்வில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் எனக்கு கிடைத்திருக்கிறது” என தெரிவித்துள்ளார்.