மேட்டூர்/தருமபுரி:
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 11,208 கனஅடியாக சரிந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், சரிந்தும் காணப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 15,710 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 11,208கனஅடியாக சரிந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணை நீர்மட்டம் நேற்று 92.23 அடியாகவும், நீர் இருப்பு 55.23 டிஎம்சியாகவும் இருந்தது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 7-ம் தேதி விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. ஒகேனக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லில் அதிகரித்த நீர்வரத்து, தற்போது மழைப்பொழிவு குறைந்ததால் படிப்படியாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது