விஜய் கூட்டத்துக்கு புதுச்சேரியில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு – தமிழகத்தைச் சேர்ந்தோருக்கு அனுமதி இல்லை!! புதுச்சேரி காவல்துறை அறிவிப்பு…..

புதுச்சேரி:
விஜய் கூட்டத்துக்கு புதுச்சேரியினர் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு. குழந்தைகள், கர்ப்பிணிகள், தமிழகத்தைச் சேர்ந்தோருக்கு அனுமதியில்லை என்று காவல்துறை கட்டுப்பாடுகளை தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த தவெகவினர் முதல்வர் ரங்கசாமி, டிஜிபி அலுவலகத்தில் மனு தந்தனர். பலமுறை தவெக செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வந்து முயற்சித்தும் அதற்கு அனுமதி தரவில்லை.

இச்சூழலில் உப்பளம் புதிய துறைமுகம் எக்ஸ்போ மைதானத்தில் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று இரவு வெளியிட்ட உத்தரவு: தவெக பொதுக்கூட்டத்துக்கு அக்கட்சி நிர்வாகிகள் கோரியப்படி 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

தவெக கட்சி தரப்பில் தரப்படும் க்யூஆர் கோடு கொண்ட நுழைவுச்சீட்டு வைத்திருப்போர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

க்யூஆர் கோடு நுழைவுசீட்டு இல்லாதோருக்கு அனுமதியில்லை என்பதால் பொதுமக்கள் அரங்குக்கு வரவேண்டாம். அது சிரமத்தை ஏற்படுத்தும்.

முக்கியமாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் நிகழ்வில் பங்கேற்க அனுமதி இல்லை.

புதுச்சேரியில் வசிப்போருக்கு மட்டுமே க்யூ ஆர் கோடு நுழைவு சீட்டு தரப்பட்டு, இங்கு வசிப்போர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். புதுச்சேரி அருகேயுள்ள தமிழக மாவட்டங்களில் வசிப்போர் உப்பளம் மைதானத்துக்குள் நுழைய அனுமதியில்லை.

வாகனங்களை நிறுத்த பாண்டி மெரினா, ஸ்டேடியத்தின் பின்புறம், பழைய துறைமுகப்பகுதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாலையோரத்திலோ, அரங்கின் உள்ளேயோ வாகன நிறுத்துமிடம் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. போதிய குடிநீர், கழிப்பறை வசதிகள், ஆம்புலன்ஸ்கள், முதலுதவி மருந்துவ குழுக்கள், தீயணைப்பு இயந்திரங்கள், அவசர காலத்தில் வெளியேறும் வழிகள் போன்ற ஏற்பாடுகளை தவெக செய்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிகழ்வில் பாதுகாப்பு நடத்தையை உறுத்தி செய்ய பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *