பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ. 2000 நோட்டுக்களை 19 ரிசர்வ் வங்கி அலுலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2016 ஆம் ஆண்டு 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற்றது.
அத்துடன் 2000 ரூபாய் நோட்டுகளை புதிதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ( 2023) மே 23ஆம் தேதியன்று புழக்கத்திலுள்ள ரூ.2000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
ரூ.2000 ரூபாய் நோட்டுக்களை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் அல்லது வங்கி கிளைகளில் ஒப்படைத்து, அதற்குரிய பணத்தை வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என்றும், அக்டோபர் 1-ம் தேதிக்கு மேல் ரூ.2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வங்கிகள் மூலமாக தொடர்ந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெற்றப்பட்டு வந்தன. இருப்பினும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி வரை 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டன.
தொடர்ந்து நடப்பாண்டு கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த 97.96% ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள ரூ. 7,261 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் பொதுமக்களிடையே புழக்கத்தில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் கைவசம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுக்களை 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.