மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் கடற்கரை கோவில், ஐந்தரதம் போன்ற புராதன பகுதிகள் நிரம்பி காணப்பட்டது.
கடற்கரை பகுதியில் ராட்சத அலையில் கடலில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் பரசுராமன் உள்ளிட்ட போலீசார் கடலில் குளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினர். அவர்களை கரைக்கு வரவழைத்து அறிவுரை கூறி மற்ற புராதன சின்னங்களை சுற்றிப்பார்த்து செல்லுமாறு அனுப்பினர்.
குறிப்பாக தங்கள் பெற்றோருடன் குழந்தைகளும், சிறுவர், சிறுமிகளும் கடற்கரை மணலில் விளையாடி மகிழ்ந்தனர்.
கடற்ரையில் திருட்டு சம்பவங்களை தடுக்க ஏராளமான போலீசார் சாதாரண உடையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதை காண முடிந்தது.
பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் நேற்று சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
கிழக்கு ராஜவீதி, மேற்கு ராஜ வீதி, கடற்கரை சாலை பகுதியில் அதிக அளவில் சுற்றுலா வாகனங்கள் புராதன சின்னங்களை நோக்கி சென்றதை காண முடிந்தது.
மேலும் சனி, ஞாயிறு போன்ற வார விடுமுறை தினங்களில் போதிய அரசு பஸ்கள் இயக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் பலர் அவதியுற்று வருகின்றனர்.
கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இரு சக்கர வாகனங்களில் சுற்றுலா வந்த வாலிபர்கள் பலர் ஹெல்மெட் அணியாமல் வந்தனர்.
அவர்களை மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்குமார் மற்றும் போலீசார் மடக்கிப்பிடித்து அபராதம் விதித்தனர்.
மேலும் மது குடித்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களை எச்சரித்து அனுப்பினர்.