அனுமன் ஜெயந்தி: 1 லட்சத்து 8 வடை மாலையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்!!

நாமக்கல்,
நாமக்கல் மாநகரின் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர பிரமாண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்த கோவிலில் தினசரி அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அதில் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநில பக்தர்களும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

மேலும் இக்கோவிலில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான அனுமன் ஜெயந்தி விழா இன்று (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடை மாலை ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 11 மணி வரை வடை மாலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

அதன்பின்னர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் தொடங்க உள்ளன. அப்போது நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சீயக்காய்த்தூள், 1008 லிட்டர் பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட நறுமண பொருட்களை கொண்டு பட்டாச்சாரியார்கள் அபிஷேகத்தை செய்ய உள்ளனர். இதனையடுத்து பிற்பகல் 1 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் பல வண்ண பூக்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமமின்றி ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய ஏதுவாக கட்டண தரிசன வழி மற்றும் இலவச தரிசன என தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

காலை முதல் இரவு வரை பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும் என்பதால் கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *