திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களை பலியிட தடை கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!!

மதுரை:
திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களை பலியிட தடை கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைக்கண்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘முருகனின் அறுபடை வீடுகளில் முதலாது வீடான திருப்பரங்குன்றம் மிகவும் பிரசித்தி பெற்றது. குகை கோயிலான திருப்பரங்குன்றம் பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டது.

திருப்பரங்குன்றம் கோயிலின் மலைப்பகுதியில் காசி விஸ்வநாதர் கோயில், தீபம் தூண், ஸ்தல விருட்ச மரம் ஆகியவை அமைந்துள்ளன. தென் பகுதியில் உமையாண்டார் குகை கோயிலும், 11 தீர்த்தக் குளங்களும் அமைந்துள்ளன.

சைவ தலமாக உள்ள திருப்பரங்குன்றம் கோயிலில் எவ்விதமான உயிர் பலியும் கூடாது. அதோடு அப்பகுதியில் மாமிசங்களை சமைத்து, பரிமாறவும் அனுமதிக்க கூடாது. திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சிக்கந்தர் பாதுஷா தர்காவின் சார்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. அதில் ஜனவரி 18-ம் தேதி ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு, சமபந்தி உணவு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இது முருகன் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்தது. அதோடு திருப்பரங்குன்றம் மலை, சிக்கந்தர் மலை என குறிப்பிடப்பட்டிருந்ததும் வருத்தமளித்தது.

இதற்கு முன்பாக உயிர் பலியிடவோ, கந்தூரி அல்லது சமபந்தி விழாக்களை நடத்தவோ எவ்விதமான அனுமதியும் வழங்கப்படாத நிலையில், தற்போது சிக்கந்தர் பாஷா தர்காவினர் இந்த முயற்சியை எடுத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.

இது மதரீதியாக பிரச்சினைகளை உருவாக்கும் வகையில் உள்ளது. எனவே திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்காவினர் உயிரினங்களை பலியிடுவதற்கும், அதனை சமைத்து உணவு பரிமாறுவதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ. டி. மரியகிளாட் அமர்வில் இன்று (ஜன.28) விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், இது தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மனு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகர காவல் ஆணையர், இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர், திருமங்கலம் கோட்டச்சியார், சிக்கந்தர் பாதுஷா தர்கா அறங்காவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இதே பிரச்சினை தொடர்பான மனுக்களுடன் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டு தள்ளிவைத்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *