திமுக அரசால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால், பொதுமக்களுக்கு ஆதரவாக அதிமுகவினர் நிற்க வேண்டும்- பழனிசாமி !!

சென்னை ;
அதிமுக கூட்டணியில் ஓரிரு நாளில் புதிய கட்சி இணைய இருப்பதாக, தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணலில் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து கடந்த மாதம் விருப்ப மனுக்களை கட்சி தலைமை பெற்றது. இதில், மொத்தம் 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

அதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தங்களின் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 2,187 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர்.

தேர்தல் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், கடந்த ஜன.9-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

பொதுச்செயலாளர் பழனிசாமி நேர்காணல் செய்து வருகிறார். 3-ம் நாளான நேற்று, விருதுநகர் மேற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு, கடலூர் மேற்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி புறநகர் வடக்கு ஆகிய கட்சி அமைப்பு ரீதியான மாவட்டங்களைச் சேர்ந்த, விருப்பமனு அளித்தவர்கள் பங்கேற்றனர்.

பிற்பகலில் நடைபெற்ற நேர்காணலில் திருச்சி மாநகர், திருச்சி புறநகர் தெற்கு, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, தருமபுரி கட்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். நேர்காணலின் போது பழனிசாமி பேசியதாவது:

தேர்தல் நெருங்கி வருகிறது. அதிமுகவினர் அனைவரும் பொது மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்.

திமுக அரசால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால், பொதுமக்களுக்கு ஆதரவாக அதிமுகவினர் நிற்க வேண்டும்.

5 ஆண்டு திமுக அரசின் மக்கள் விரோத செயல்கள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியது உள்ளிட்டவற்றை விளக்கி சொல்ல வேண்டும்.

விரைவில் சில முக்கிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய உள்ளன. ஓரிரு நாளில் புதிய கட்சி ஒன்று இணைய உள்ளது. தமிழகத்தில் பலமான கூட்டணி, அதிமுக தலைமையில் அமையும்.

அதனால் அதிமுகவின் வெற்றி குறித்து தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். கட்சி பணிகளை தீவிரமாக செய்யுங்கள். உங்களில் பலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.

சில தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கலாம். இருப்பினும், அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஓரிரு நாளில் புதிய கட்சி ஒன்று அதிமுக கூட்டணியில் சேரும் என்று பழனிசாமி தெரிவித்துள்ள நிலையில், அந்தக் கட்சி எது என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *