சென்னை:
மதுராந்தகத்தில் வரும் 23-ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கூட்டத்தில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக மற்றும் தேமுதிக கட்சிகள் இணையுமா என்பதற்கு அன்று பதில் கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் நடைபெறுகிற மக்கள் விரோத திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பிரச்சார கூட்டத்தை, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி வரும் 23-ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் மேடையில் இடம்பெறுவார்கள்.
இந்தக் கூட்டத்தில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வலிமையைக் காட்டும் பிரம்மாண்ட கூட்டமாக இது அமையும்.
கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இருக்கிறாரா? தேமுதிக இடம்பெறுமா? என்ற கேள்விகளுக்கு 23-ம் தேதி அனைவருக்கும் பதில் கிடைக்கும்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்த தேர்தலின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,500 வழங்குவதாக அறிவித்திருந்தார். தற்போது அதை ரூ.2,000 ஆக வழங்குவதாக அறிவித்துள்ளார். மக்கள் மனதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போவது நிச்சயம்.
இதை திமுகவிடம் இருந்து காப்பியடித்த வாக்குறுதிகள் என்று சொல்ல முடியாது. அதேபோல் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஓசூர் விமான நிலைய திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.
அனுமதி மறுக்கப்படவில்லை. அத்திட்டத்தில் சில விளக்கங்களை கேட்டுள்ளனர். இதை மறுப்பு என்று சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.