மதுரை:
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தர்கா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் கந்தூரி விழா நடத்த தடை கோரி, மாணிக்கமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த தனி நீதிபதி, சிக்கந்தர் தர்காவில் கந்தூரி விழா நடத்தக் கூடாது. சந்தனக் கூடு விழா நடத்தலாம். 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதற்கு எதிராக, தர்கா தரப்பில் ஒசீர்கான் என்பவர் உயர் நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
அம்மனுவில், திருப்பரங்குன்றம் தர்கா தரப்பில் நடைபெறும் சந்தனக்கூடு விழாவில் சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை பங்கேற்பது வழக்கம். தனி நீதிபதி 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதான மனுவின் மனுதாரர் எந்த கோரிக்கையும் வைக்காத நிலையில் கட்டுப்பாடு விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது தொடர்பான விசாரணை நீதிபதிகள் ஜெ.ஜெயச்சந்திரன், கே.கே ராமகிருஷ்ணன் அமர்வில் நேற்று நடைபெற்றது.
மனுதாரர் தரப்பில், தனி நீதிபதி மனுதாரர் கோராத நிவாரணத்தை வழங்கி உள்ளார். இதனால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் மலை மேல் செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்பாக காவல்துறையும், தொல்லியல் துறையுமே முடிவு செய்ய முடியும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை மீறி உத்தரவிட முடியாது. தனி நீதிபதி இடைக்கால உத்தரவுதான் பிறப்பித்துள்ளார்.
தனி நீதிபதி முன் வழக்கு விசாரணைக்கு வரும்போது மனுதாரர் கோரிக்கையை தெரிவிக்கலாம். மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.