சென்னை;
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கடந்த 16-ந்தேதி சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா ஆகியோர் விசாரணைக்காக நேரில் ஆஜராகினர். அப்போது, மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜாய் கிரிசில்டா தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள அணுகியதாக மாதம்பட்டி ரங்கராஜ் அவதூறு பரப்புவதாக ஜாய் கிரிசில்டா தரப்பில் அவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ரங்கராஜ் அறிக்கையை 24 மணி நேரத்தில் திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் உரிமையியல், குற்றவியல் வழக்கு தொடரப்படும் என நோட்டீசில் ஜாய் கிரிசில்டா தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து நேற்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில், 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவ செலவு, வீட்டு வாடகை, இதர செலவுகளுக்காக மாதம் ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை பராமரிப்பு தொகையாக வழங்க மாதம்பட்டி ரங்கராஜூக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தார். ஜாய் கிரிசில்டா தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கூறியுள்ளார்.