சென்னை:
சட்டப்பேரவையை வேண்டுமென்றே புறக்கணித்து, பாஜகவின் பிரதிநிதியாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி: சட்டப்பேரவையில் இருந்து 3-வது ஆண்டாக உரையை வாசிக்காமல் வெளியேறி இருக்கிறார் ஆளுநர் ரவி. பிரதமர் மோடி 2019-ல் பங்கேற்ற விழாவிலே தேசிய கீதம் மறுக்கப்பட்ட போது ஆளுநர் ரவியின் இதயம் ஏன் துடிக்கவில்லை? மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பாஜகவின் பிரதிநிதியாக செயல்படுகிறார்.
ஆளுநருக்கு அரசியல் ஆசை இருந்தால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்து தேர்தலில் வென்று அரசியல் செய்யட்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஆளுநர் தன் உரையை வாசிக்காமல் வெளியேறி சட்டப்பேரவை மரபுகளை துச்சமாக கருதி அவமதித்து இருக்கிறார். தேசிய கீதம் பாட வில்லை என்று கூறி வேண்டுமென்றே பேரவையை புறக்கணித்துள்ளார்.
இதற்காக அவர் வெளியிட்ட அறிக்கையும் பாஜக அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கை போல் இருக்கிறது. அரசமைப்பு சட்ட நெறிகளை காலில் போட்டு மிதிக்கும் ஆளுநரின் செயல்பாடு கண்டனத்துக்குரியது.
திக தலைவர் கி.வீரமணி: அரசியலமைப்பு சட்டத்தை மீறி, எதிர்க்கட்சி தலைவரை போல் நடந்து கொள்கிறார் ஆர்.என்.ரவி. அதன் ஒரு பகுதியாக திமுகவுக்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இப்போதே தொடங்கிவிட்டார். அரசியலமைப்பை கொச்சைப்படுத்தும் தரம் தாழ்ந்த நடவடிக்கை இது.
விசிக தலைவர் திருமாவளவன்: சட்டப்பேரவையில் ஆளுநர் தனது கடமையை ஆற்றாமல் வெளியேறியிருப்பது அவரது வாடிக்கையான அணுகுமுறைதான். இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை.
அவர் இப்பொறுப்பில் இருக்கும் வரை இத்தகைய அடாவடிகளை தொடரவே செய்வார். இது அவரது திட்டமிட்ட அவை மரபு மீறலாகும். தொடர்ந்து சட்டப்பேரவையை அவமதிக்கும் அவரது போக்கு கண்டனத்துக்குரியது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: ஒவ்வொரு மாநில பேரவைக்கும் தனித்தனி மரபுகள் உள்ளன. ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்ற முறையில், அந்த மாநிலத்தின் மரபுகளை கடைபிடிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. அதற்கு மாறாக, ‘தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்று ஆளுநர் அத்துமீறுகிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: சட்டப்பேரவையில் உரையாற்றி, கூட்டத்தொடரை தொடங்கி வைக்க வேண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவை மரபை உடைத்து சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
எதிர்க்கட்சிகளும் சொல்ல முடியாத, அடிப்படை ஆதாரம் இல்லாத அரசியல் அவதூறுகளை வன்மத்துடன் வெளியிட்டுள்ளார். மலிவான அரசியலில் ஈடுபடும் ஆர்.என்.ரவி, ஒரு வினாடியும் ஆளுநர் மாளிகையில் இருக்க தகுதியற்றவர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்: தமிழக அரசு தயாரித்து கொடுக்கும் உரைகளை சட்டப்பேரவையில் ஆளுநர் வாசிப்பது தான் மரபு. ஆனால் அவர் எதிர்க்கட்சிகளை விட ஒருபடி மேலே சென்று, அரசு தயாரித்த உரைகளை படிக்காமல் வெளிநடப்பு செய்து, அரசுக்கு எதிராக ஆளுநர் பேசுவது அரசியலமைப்புக்கு முரணானது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தமிழக அரசின் செயல் திட்டங்களும், அதனால் மக்களுக்குக் கிடைக்கும் பயன்களும் நிறைந்திருக்க வேண்டிய ஆளுநர் உரை, திமுகவின் கனவை தூக்கி சுமந்திருப்பது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. அதை வாசிக்குமாறு ஆளுநரை நிர்பந்திருப்பதும் கண்டனத்துக்குரியது.
அதேநேரம், நீண்ட நெடிய பாரம்பரியமிக்க சட்டப்பேரவையின் மரபுகளை மாற்ற கோருவது ஆளுநருக்கு அழகல்ல. இவர்களுடன் எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.