சென்னை:
ஆளுநருடன் இணக்கமான போக்கை மாநில அரசு விரும்பவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளிநடப்பு செய்தபின் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த முறை போலவே ஆளுநரின் கோரிக்கையான தேசிய கீதத்தை, முன்கூட்டியே இசைக்க வேண்டும் என்பது இந்த முறையும் நிறைவேற்றப்படவில்லை.
தொடர்ந்து ஆளுநர் வெளியேறிய பின்பு, அதற்கான காரணத்தையும் ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கிறது.
ஆளுநர் உரையை படிக்க மாட்டார் என்ற முன் முடிவுகளுடன் முதல்வர் ஸ்டாலின் தனது உரையை தயாரித்து வந்து படித்திருக்கிறார்.
இதன்மூலம் ஆளுநர் அவரது உரையை படிக்க வேண்டும் என்பது இவர்களது எண்ணமாக இல்லை.
சட்டப்பேரவையில் ஆடியோவை துண்டித்துவிட்டனர். மேலும் உள்ளே நடந்த விஷயத்தை வெளியே காட்டக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
எனில் எந்த செய்தியும் மக்களுக்கு தெரியக்கூடாது என அரசு நினைக்கிறது. ஆளுநர் தொடர்பான விஷயங்களில் அரசு ஆதிக்க உணர்வோடு நடந்து கொண்டிருக்கிறது.
அரசு வேண்டுமென்றே மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் ஒரு மோதல் இருப்பதை போல ஒரு உருவாக்கத்தை கொடுக்க நினைக்கிறார்கள். ஆளுநருடன் இணக்கமான போக்கு நிலவவேண்டும் என்பதை அரசு விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் கூறுகையில், “தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதை பொருட்கள் புழக்கம் என சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டது.
இதை கண்டித்து வெளிநடப்பு செய்தோம். ஆளுநர் வெளியேறியதும் சரியான நடவடிக்கை தான்.” என்றார்.