சென்னை:
“இந்த தேர்தல் தான் திமுக-வுக்கு இறுதித் தேர்தல். குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுகிற தேர்தல்” என மதுராந்தகத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கி உரையாற்றினார். பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசியதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: இந்தியத் திருநாடே மதுராந்தகத்தை பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த மண்ணில் பிரதமர் கால் வைத்தவுடனே சூரியனை இயற்கை மறைத்துவிட்டது. மக்கள் கடல் போல் காட்சியளிக்கிறார்கள், மதுராந்தகமே குலுங்குகிறது. இதுவே தேர்தல் வெற்றிக்குச் சான்று.
கருதி இடத்தாற் செயின் – அதாவது உரிய காலத்தையும் இடத்தையும் தேர்வு செய்தால் உலகத்தை அடக்கலாம் என்பது பொருள்.
நம்மை எதிர்ப்பவர்கள் எத்தனை தீயவர்களாக இருந்தாலும் உரிய காலத்தில் உரியவர்களுடன் இணைந்து உறுதியாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். அத்தகைய தருணம் இப்போது கிடைத்திருக்கிறது.
திமுக-வின் நான்கே முக்கால் ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு கொடுத்தது வேதனை மட்டும்தான் எல்லா துறைகளிலும் ஊழல் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும். ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா?
தமிழகத்தை கருணாநிதி குடும்பம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. கருணாநிதி முதல்வராக இருந்தார், இப்போது ஸ்டாலின் இருக்கிறார். இந்த ஆட்சியில் செய்த சாதனை ஒன்றே ஒன்று, அது ஊழல். ஸ்டாலின் குடும்பம் உலகளவில் பெரிய பணக்கார குடும்பமாக இருக்கிறது.
ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலினை கொண்டுவர முயற்சிக்கிறார். திமுக-வுக்காக உழைத்த எத்தனையோ பேர் வீதியில் கிடக்கிறார்கள். கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர்களுக்குத்தான் கட்சியிலும் அதிகாரத்திலும் இடம் கிடைக்கும்.
அதன்படி எந்த தகுதியும் இல்லாத உதயநிதியை இளைஞரணி தலைவராக்கினார், எம்எல்ஏ ஆக்கினார், அமைச்சர் ஆக்கினார், இப்போது துணை முதல்வர் ஆக்கிவிட்டார். ஆனால், அடுத்து எந்தக் காலத்திலும், எந்தப் பதவிக்கும் கருணாநிதி குடும்பம் வர முடியாது.
இந்த தேர்தல் தான் திமுக-வுக்கு இறுதி தேர்தல். தீயசக்தி திமுகவை வீழ்த்துவோம், எம்ஜிஆர், அம்மா இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நிறைவேற்றுவோம். பாரதப் பிரதமர் நம்முடன் துணை நிற்கிறார், நம்முடைய இயக்கம் வலிமையானது, கூட்டணி வலிமையான வெற்றிக்கூட்டணி.
தேர்தல் என்ற போரில் நம்முடைய கூட்டணிக் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் தேனீக்கள் போல சுறுசுறுப்பாகச் செயல்பட்டு எதிரிகளை ஓடஓட விரட்டி வெற்றிக்கொடி நாட்டுவோம்.
இந்தத் தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல், ஊழல் நிறைந்த ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல். மக்கள் துணை நிற்கிறார்கள். நம்முடைய கூட்டணி தேர்தலில் 210 இடங்களில் வெல்லும். பெரும்பான்மை இடங்களில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும்.
மத்தியில் இருந்து தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டமும் கிடைக்கவில்லை என்று ஸ்டாலின் பொய்சொல்கிறார். நாம் கேட்ட திட்டத்தைக் கொடுத்தார்கள், ரயில்வே பாலங்கள் கேட்டோம் கொடுத்தார்கள், தேசிய நெடுஞ்சாலைகள் வழங்கினார்கள். சென்னை மாநகரில் மெட்ரோ 2வது கட்டம் 63 ஆயிரம் கோடி வழங்கி, மத்திய அமைச்சர்களே அடிக்கல் நாட்டினர்.
‘உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம்’ என்ற அண்ணாவின் கொள்கையை உரக்கக் கூறி எம்ஜிஆர் மற்றும் அம்மா வகுத்துத் தந்த
அமைதி, வளம், வளர்ச்சி என்பதை தாரக மந்திரமாகக் கூறி, எங்களுக்கு உறுதியாக ஆதரவுக்கரம் நீட்டிவரும் பிரதமர் மோடிக்கும், தே.ஜ. கூட்டணியினருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம், பைபை ஸ்டாலின்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியவில்லை. சனாதன தர்மத்தை அழிப்போம் என்று சொல்கிறார்கள். மதுராந்தகத்தில் கூடியிருக்கிற கூட்டம் அவர்களது ஆட்டத்தை முடிப்பதற்கான கூட்டம்.
பல செடியில் பூத்த மனம் வீசுகின்ற மலர்கள், ஒரு மாலை போல் இறைவனிடம் சேரும். அதுபோல், மனம் வீசுகின்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் பல கட்சி தலைவர்கள் இன்று ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
வானமே வாழ்த்திக் கொண்டிருக்கிறது. சூரியன் மறைந்து போனது. ஆட்சி மாற்றம் நிச்சயம் உறுதி. அதற்கான வேலைகளை பிரதமர் மோடியும், பழனிசாமியும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
பாமக தலைவர் அன்புமணி: திமுக அரசு என்றாலே ஊழல், கஞ்சா, சாராயம் தான். கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீர் பாசன திட்டங்கள், புதிய மாவட்டங்கள், புதிய மருத்துவக் கல்லூரிகள், புதிய மின் திட்டங்கள் என அனைத்தும் பூஜ்ஜியம். ஆனால், ஊழலில் மட்டும் முதலிடத்தில் உள்ளனர்.
மணல் கொள்ளையில் ரூ.4,750 கோடி, நகராட்சி நிர்வாகப் பொறியாளர் நியமனத்தில் ரூ.888 கோடி, டாஸ்மாக் விற்பனை வரி ஏய்ப்பில் ரூ.1.82 லட்சம் கோடி, கனிம வளத்தில் ரூ.2,500 கோடி, நெல் கொள்முதலில் ரூ.1,270 கோடி என ரூ.6 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளனர்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன்: தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் விரோத குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் அமமுக இக்கூட்டணியில் சேரவேண்டும் என பிரதமர் மோடி விரும்பினார்.
அதனடிப்படையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமையேற்று இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வந்திருக்கிறோம். எங்களுக்குள் சண்டை சச்சரவுகள் இருந்தது உண்மை தான்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, பங்காளிகளாக இருந்தவர்கள் சண்டையால் பிரிந்து இருந்தோம். ஆனால், நாங்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டார்கள்.
தமிழகத்தின் நலனைக் கருதியும், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றும், எங்கள் மனதில் இருந்த அனைத்து கோபதாபங்களையும் தூக்கி எறிந்துவிட்டு ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் உருவாக்கும் நோக்கத்துடன் தயக்கமின்றி, குழப்பமின்றி, அழுத்தமின்றி அமமுக இந்தக் கூட்டணியில் இணைந்திருக்கிறது.