சென்னை:
இன்னும் 2 மாதத்தில் திமுக ஆட்சி அகற்றப்படும். எங்கள் கூட்டணி வெற்றி பெரும். தமிழக மக்கள் மாபெரும் வெற்றியை எங்களுக்கு அளிப்பர்” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
இது தொடர்பாக, நேற்று பிரதமர் தலைமையிலான மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன் அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்த திமுக, 505 தேர்தல் வாக்குறுதிகளில் 66 வாக்குறுதிகளை தான் முழுமையாக நிறைவேற்றியுள்ளது. கடனை வாங்கி கொள்ளையடித்துள்ளனர்.
அனைத்து கிராமங்களிலும் கஞ்சா போதை பொருட்களை விற்றுக் கொண்டிருக்கின்றனர். ஒரு தலைமுறையையே அழித்த பாவம் திமுக-வுக்குச் சேரும். முதல்வருக்கு என்ன நடக்கிறது என்று தெரியாத சூழல் உள்ளது. எங்கள் கூட்டணி மிக பலமான கூட்டணி.
எங்களோடு இன்னும் சில கட்சிகள் சேரவுள்ளன. இன்னும் 2 மாதத்தில் திமுக ஆட்சி அகற்றப்படும். எங்கள் கூட்டணி வெற்றி பெரும். தமிழக மக்கள் மாபெரும் வெற்றியை எங்களுக்கு அளிப்பர். கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி பலமுறை தமிழகம் வந்துள்ளார்.
எத்தனையோ கட்டுமானங்கள், நெடுஞ்சாலைகள், தொழிற்சாலைகளை திறந்து வைத்துள்ளார். ஆனால், 5 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு திமுக என்ன செய்தது என ஒன்றையாவது கூற முடியுமா? கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது.
நீட்தேர்வு ரத்து, கல்விக் கடன் தள்ளுபடி, மாதா மாதம் மின் கணக்கீடு, 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்துவோம், தனியார் தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்களுக்கு 25 சதவீத வேலைவாய்ப்பு என்றெல்லாம் திமுக கூறியது.
ஆனால், என்ன செய்தார்கள்? கடனை வாங்கி கொள்ளையடித்தார்கள். கடனுக்கான வட்டியை செலுத்தவும், பொங்கலுக்கு பணம், மாத மாதம் ஆயிரம் அளிக்கவும்தான் கடன் வாங்குகிறது திமுக அரசு.
வருவாயில் இவற்றையெல்லாம் அளிக்காமல் கடன் பெற்றுத்தான் அளிக்க வேண்டுமா? இந்தியாவில் தமிழகம் தான் கடன் அதிகமாக வாங்கும் மாநிலம்.
அனைத்துத் துறைகளிலும் ஆயிரக் கணக்கான கோடிகளில் ஊழல் செய்துள்ளனர். ஊழல் திமுக ஆட்சியை மக்கள் விரட்டி அடிக்கவுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.