சென்னை:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சந்தித்தார்.
பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள பழனிசாமியின் இல்லத்தில் பியூஷ் கோயல் காலை உணவு அருந்தினார்.
இந்த சந்திப்பின்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி ஆகியோர் இருந்தனர். பாஜக சார்பில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் விருந்தில் பங்கேற்றனர்.
சில நாட்களுக்கு முன்னதாக அன்புமணி தலைமையிலான பாமக, அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்தது. பரபரப்பான சூழலில், நேற்று டிடிவி.தினகரனின் அமமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது.
நாளை செங்கல்பட்டில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் தே.ஜ.கூட்டணியில் உள்ள கட்சிகள் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணியில் பாமக, அமமுக கட்சிகள் இணைந்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்தெல்லாம் இன்றைய பியூஷ் கோயல் – பழனிசாமி சந்திப்பில் பேசப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்புக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், “பிரதமர் மோடி நாளை பங்கேற்கும் கூட்டம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளம் இடுவதாக இருக்கும்” என தெரிவித்தார்.