கோவை:
கோவை காட்டூர் அருகே, பட்டேல் சாலையில் உள்ள ராஜரத்தினம் வீதியில், பிரகாசம் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகன உதிரிபாக விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்தக் கட்டிடம் தரை தளம் மற்றும் 2 தளங்கள் கொண்டதாகும். தரை தளத்தில் உள்ள கடையில் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது.
முதல் மற்றும் 2-வது மாடியில் இருசக்கர வாகன உதிரிபாக பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று மதியம் கட்டிடத்தின் ஒரு பகுதியில் நிறுவனத்தின் சார்பில் வெல்டிங் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. மாலையில் இந்தக் கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்து கரும்புகை வெளியே வந்தது.
அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அங்கு சென்று பார்த்த போது, கடையில் தீப்பிடித்தது தெரியவந்தது. ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ வேகமாக பரவியதால் அணைக்க முடியவில்லை.
தொடர்ந்து கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுரை தலைமையில் கோவை தெற்கு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடையில் உதிரி பாக இயந்திரங்கள், ஆயி்ல் உள்ளிட்டவை இருந்ததால் தீ வேகமாக பரவியது. மேலும், அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மாநகர காவல் ஆணையர் என். கண்ணன், மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், கோவை எம்.பி கணபதி ப.ராஜ்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைக்கும் பணியை தீவிரப்படுத்தினர். சூலூர் விமானப்படையினரும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
50-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனர். தீயை கட்டுப்படுத்த கோவை விமானப்படை மற்றும் கப்பற்படையில் இருந்து தலா 1 தீயணைப்பு ஊர்தி சம்பவ இடத்துக்கு வரவழைக்கப் பட்டது.
அவர்கள் ரசாயனம் கலந்த நீரை கட்டிடத்தில் அடித்து தீயணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினருடன் இணைந்து ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டு, கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து காட்டூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.