கோவை,
கோவை மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதன்படி, கவுண்டம்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் செயல்முறை கிடங்கினை ஆய்வு செய்த கலெக்டர், அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருப்பு விவரம், தரம், விநியோகம் மற்றும் பதிவேடுகளில் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, புதுக்காலனி பகுதியில் மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் “உங்க கனவு சொல்லுங்க” திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து தேவைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார்.
மேலும், அன்னூர் ஊராட்சி ஒன்றியம், பசூர் ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையில் உணவுப் பொருட்களின் இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அன்னூர் ஊராட்சி ஒன்றியம், பசூர் ஊராட்சி, புதுக்காலனி பகுதியில் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 25 வீடுகளின் அளவுகள், பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்களின் தரம், பயனாளிகள் தேர்வு உள்ளிட்ட விவரங்கள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, பயனாளிகளுடன் கலந்துரையாடியும் அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதல் நிலை மண்டல மேலாளர் பழனிகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதன், அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கரி, மகேஸ்வரி, வட்டாட்சியர் யமுனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.