தேசபக்தி குறித்து யாரும் எங்களுக்கு பாடம் எடுக்கும் நிலையில் இல்லை; தேசபக்தி பாடம் நடத்தக்கூடிய அளவுக்கு இந்தத் தேசத்திற்காகப் போராடிய வர்களும் அவர்கள் இல்லை!! ஆளுநர் செயல்பாடு குறித்து பேரவையில் ஸ்டாலின் விளக்கம்!

சென்னை:
“தேசபக்தி குறித்து யாரும் எங்களுக்கு பாடம் எடுக்கும் நிலையில் இல்லை. தேசபக்தி பாடம் நடத்தக்கூடிய அளவுக்கு இந்தத் தேசத்திற்காகப் போராடியவர்களும் அவர்கள் இல்லை.

ஜனநாயகத் தேசத்தில் அரசியலமைப்பு மாண்பை அதிகாரத் தன்மையோடு மாற்ற நினைப்பவர்கள் தான் இன்றைய காலகட்டத்தில் தேச விரோதிகள்.” என்று சட்டப்பேரவையில் ஆளுநரின் செயல்பாடு குறித்து விளக்கமளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.20-ம் தேதி கூடியது. அன்றைய தினம் ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்துச் சென்றார். இது சர்ச்சையானது.

இந்நிலையில் ஆளுநரின் செயல்பாடு குறித்து இன்று (சனிக்கிழமை) முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் காட்டமான வாதங்களை முன்வைத்தார்.

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் நலனுக்காக செயல்பட வேண்டிய ஆளுநர், தமிழக மக்களுக்காகப் பாடுபடும் எங்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுவது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

ஆளுநர் தாம் படிக்க வேண்டிய உரையைப் படிக்காமல் செல்வது வேடிக்கையாக உள்ளது.

இதன்மூலம், அவர் வகிக்கும் பதவியையே அவர் அவமானப்படுத்துகிறார். ஒரு பொறுப்புமிக்க பதவியில் இருந்து கொண்டு அதை கேவலப்படுத்துகிறர்.

கடந்த மூன்றாண்டுகளாக நமது ஆளுநர் ஒரே காரணத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தயாரித்துக் கொடுத்த உரையைப் படிக்காமல் வெளியேறுவது என்பது மக்களாட்சிக்கு விடப்பட்ட சவாலாகவே இந்த பேரவை கருத வேண்டி உள்ளது.

இந்த அரசு கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. கோடிக்கணக்கான மக்களுடைய விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் செயல்படக்கூடிய அரசு இது.

ஆளுநர் உரை தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும், முடிவடையும்போது நாட்டுப்பண் பாடுவதும் தமிழக சட்டப்பேரவையின் மரபு.

முதலிலேயே நாட்டுப்பண் பாடவில்லை என்பதைத் திரும்பத் திரும்பக் குற்றச்சாட்டாக அவர் கூறி வருகிறார்.

இந்த நாட்டின் மீதும், நாட்டுப்பண் மீதும் அளவற்ற பெருமதிப்பையும் மரியாதையும் கொண்டுள்ளவர்கள் நாம்.

தேசிய ஒருமைப்பாட்டிலும் நாட்டுப் பற்றிலும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல நாங்கள் என்பதை ஆளுநருக்கு அழுத்தமாகவும் திருத்தமாகவும் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

யாரும் எங்களுக்கு தேசபக்தி குறித்து பாடம் எடுக்கும் நிலையில் இல்லை. தேசபக்தி பாடம் நடத்தக்கூடிய அளவிற்கு இந்தத் தேசத்திற்காகப் போராடியவர்களும் அவர்கள் இல்லை.

ஜனநாயகத் தேசத்தில் அரசியலமைப்பு மாண்பை அதிகாரத் தன்மையோடு மாற்ற நினைப்பவர்கள் தான் இன்றைய காலகட்டத்தில் தேச விரோதிகள். அவர்கள் யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளிக்க வேண்டிய நான், இன்று ஆளுநருக்கு விளக்கம் அளித்துப் பேச வேண்டிய நிலையில் இருக்கிறேன்.

அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த ஆளுநர்கள் கூட இப்படி செயல்படவில்லை.

பல முரண்பாடுகள் இதயத்தில் இருந்தாலும், அதை ரணமாக்கும் வகையில் செயல்படவில்லை. அந்த அளவுக்கு அதிகமான சோதனைகளை எதிர்கொண்டவனாக நான் இன்று நின்று கொண்டிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை சோதனைகள் எனக்குப் புதிதல்ல. சோதனைகளை வென்று வளர்ந்தவன் நான்.

என்னைச் சீண்டிப் பார்ப்பவர்கள் மனதிற்குள் மகிழ்ச்சி அடையலாம்; தவிர, அது என்னை எதுவும் செய்ய முடியாது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *